தருமபுரி அருகே பயங்கரம்.. மண்சரிவில் உருண்ட பாறை ரயில் மீது மோதி விபத்து.. ஓட்டுநரின் திறமையால் தப்பிய பயணிகள்!!
Dharmapuri Train Accident Averted: தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி அருகே பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் பாறை உருண்டு விழுந்து நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயிலின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. ரயிலின் அடியில் பாறை மோதியதில் பாகங்கள் சேதமடைந்தாலும், ஓட்டுநரின் சமயோசிதமான செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தருமபுரி ரயில் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
தருமபுரி, செப்.20: தருமபுரி மற்றும் அதன் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மலைகளும் குன்றுகளும் நிறைந்த தருமபுரி – தொப்பூர் ரயில் பாதை வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது. மழைக்காலங்களில் மலைக் குன்றுகளில் இருந்து மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுவது இந்த வழித்தடத்தில் அவ்வப்போது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாகத் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக நாகர்கோவிலிலிருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயில் மீது பாறை மோதிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்டார் – ஆதவ் அர்ஜுனா குறித்து இபிஎஸ் கருத்து
பாறை மோதி ரயில் பெட்டி சேதம்:
தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி மற்றும் சிவாடி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட வனப்பகுதியில் ரயில் தண்டவாளம் இரு குன்றுகளுக்கு நடுவே செல்கிறது. இன்று அதிகாலை நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இந்த முத்தம்பட்டி வனப்பகுதியைக் கடந்தபோது, குன்றிலிருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டு ஒரு பெரிய பாறை உருண்டு வந்து தண்டவாளத்தின் அருகே விழுந்தது. அப்போது அவ்வழியாக வந்த ரயிலின் பொதுப் பெட்டியின் (General Compartment) சக்கரப் பகுதியில் உள்ள ஷாக் அப்சார்பர் மீது அந்தப் பாறை பலமாக மோதியதில் அப் பகுதி சேதமடைந்தது.
சமயோசிதமாக செயல்பட்ட ஓட்டுநர்:
பாறை மோதிய சத்தத்தையும் அதிர்வையும் உணர்ந்த ரயிலின் ஓட்டுநர் (Loco Pilot) உடனடியாக ரயிலை நிறுத்தி, பெரும் விபத்து நிகழாமல் தடுத்தார். தொடர்ந்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பழுதடைந்த பாகங்களைத் தற்காலிகமாகச் சீரமைத்த அதிகாரிகள், ரயிலை மெதுவாக இயக்கி தருமபுரி ரயில் நிலையத்திற்குக் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இதையும் படிக்க: “செலவு ரூ.1.38 லட்சம் கோடி.. வருவாய் பற்றாக்குறை ரூ.20,340 கோடி!”.. வெளியான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை!!
பாதுகாப்பு வலை கோரிக்கை:
ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே முத்தம்பட்டி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுத் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்த சம்பவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் சார்பில் இரும்பு கம்பிகள் மற்றும் ராட்சத கயிறுகள் கொண்ட முப்படை பாதுகாப்பு வலைகளைக் குன்றுகளின் மீது அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இருப்பினும், இன்னும் பாதுகாப்பு வலை அமைக்கப்படாத பகுதியிலிருந்து இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் நிகழும் முன் ஆபத்தானப் பகுதிகளில் பாதுகாப்பு வலை அமைக்கும் பணிகளை உடனடியாக முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.