“பண்ணையார் ஆட்சியில் அமைச்சராக இருக்க வெட்கப்படவில்லையா?”.. வன்னியரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
Govi Chezhian Slams Minister Vanni Arasu: தலித் மாணவர்கள் மற்றும் வேங்கைவயல் விவகாரத்தில் திமுகவை விமர்சித்த அமைச்சர் வன்னியரசுவின் பேச்சு கபட நாடகம் என திமுக மூத்த தலைவர் கோவி. செழியன் கடுமையாக விமர்சித்துள்ளார். சுயநலத்திற்காகவும் அமைச்சர் பதவிக்காகவும் பட்டியலின மக்களின் உரிமைகளை வன்னியரசு அடகு வைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், அடுக்கடுக்கான கேள்விகளையும் தொடுத்துள்ளார்.
சென்னை, செப்.20: தமிழக அரசியல் களத்தில் தலித் மாணவர் பாரதிதாசன் கல்வி உதவித்தொகை விவகாரம் மற்றும் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக திமுக அரசு மீது அமைச்சர் வன்னியரசு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். தலித் மாணவர் நலனில் திமுக நாடகமாடுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான கோவி. செழியன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியரசுவின் பேச்சுக்கள் அனைத்தும் பிழைப்புவாத அரசியல் மற்றும் கபட நாடகம் எனச் சாடியுள்ளார். அதிகாரத்திற்காகவும் அமைச்சர் பதவிக்காகவும் பட்டியலின மக்களின் உரிமைகளை வன்னியரசு அடகு வைத்துவிட்டதாக அடுக்கடுக்கான சாடல்களை முன்வைத்துள்ளார்.
இதையும் படிக்க: அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்டார் – ஆதவ் அர்ஜுனா குறித்து இபிஎஸ் கருத்து
ரோகித் வெமுலா சம்பவத்துடன் ஒப்பீடு:
கோவி. செழியன் தனது பதிவில், ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலாவுக்கு நடந்த துன்புறுத்தலைப்போல, பாரதிதாசன் என்ற தலித் மாணவருக்கு மறைமுகமாக பாஜகவின் தயவில் ஆட்சி நடத்தும் விஜய்யின் அரசு செய்துள்ளதாகச் சாடியுள்ளார். தங்களது இந்த தவறு அம்பலப்பட்டுப் போனதை மறைக்கவே, வன்னியரசு வேங்கைவயல் விவகாரத்தைக் கையில் எடுத்து நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் குற்றம்சாட்டினார். வேங்கைவயல் வழக்கில் அறிவியல் பூர்வ விசாரணைக்குப் பின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்றும், அதில் உண்மைற்ற குற்றவாளிகள் உள்ளதாகக் கருதினால், முதலமைச்சர் விஜய்யிடம் மறுவிசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தும் அரசியல் நேர்மை வன்னியரசுவுக்கு இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பண்ணையார் ஆட்சி விமர்சனம்:
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்துச் சந்தித்து விஜய் ஆசுவாசப்படுத்தியதை “பண்ணையார்கள் கூட இந்த அருவருப்பைச் செய்ததில்லை” என்று வன்னியரசு முன்பு விமர்சித்ததைச் சுட்டிக்காட்டிய கோவி. செழியன், “அப்படிப்பட்ட பண்ணையார்கள் ஆட்சியில் தான் அமைச்சராக வலம் வருகிறோம் என வெட்கப்பட மாட்டீர்களா?” என வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவைக் கொள்கை எதிரி எனச் சொல்லிக்கொண்டே மறைமுகக் கூட்டு வைத்துள்ள விஜய் அரசுக்கு வெண்சாமரம் வீசும் வன்னியரசு, அந்த அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதற்காக முதலில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க : ஸ்ரீரங்கம் கோயில் நில ஆக்கிரமிப்பு சேகர்பாபுக்கு தெரியாமல் நடந்திருக்காது.. யாரையும் சும்மா விடமாட்டோம்.. அமைச்சர் ரமேஷ்!
நிலைப்பாட்டை மாற்றுவதாக குற்றச்சாட்டு:
முன்பு விஜய்யின் “தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா” பாடலை விமர்சித்த வன்னியரசு, தற்போது அமைச்சர் நாற்காலி கிடைத்ததும் “சேரியில்லா ஊருக்குள்ள பொறக்க வேண்டும் பேரப்புள்ள” எனத் தனது நிலையை மாற்றிப் பாடி வருவதாகவும், விஜய்யை விடப் பிரமாதமாக வன்னியரசு நடித்துக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ ஆகிய அடையாள மை விரலில் அழிவதற்கு முன்பே, விஜய் ஆட்சியில் சென்று ஒட்டிக்கொண்டு அமைச்சர் பதவி வாங்கியதற்கு வன்னியரசு தான் முதற்கண் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி கோவி. செழியன் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.