ஸ்ரீரங்கம் கோயில் நில ஆக்கிரமிப்பு சேகர்பாபுக்கு தெரியாமல் நடந்திருக்காது.. யாரையும் சும்மா விடமாட்டோம்.. அமைச்சர் ரமேஷ்!
Srirangam Temple Land Encroachment : திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார். இதில், யாரையும் சும்மா விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்ரீரங்கம் தொகுதியில் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து திமுகவை சேர்ந்த பகுதி செயலாளர் கட்சி அலுவலகம் அமைத்துள்ளதாக இந்த தொகுதி மக்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரித்ததில் மிகப்பெரிய அளவிலான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. திமுகவில் சாதாரண பகுதி செயலாளர் அனைத்து அரசு அலுவலர்களையும் ஏமாற்றி எப்படி கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்க முடியும். இதற்கு பின்னால் திமுகவின் முக்கிய புள்ளிகள் உள்ளனர். ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை எப்படி ஆக்கிரமிப்பு செய்திருக்க முடியும். திமுக ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையருக்கு தெரியாமல் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்க முடியாது. மிகப் பெரிய அளவில் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது. கோவில் இணை ஆணையர் மூலமாக புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக அலுவலகம் இருந்த நிலத்தை ஏன் மீட்கவில்லை
சட்டப்பேரவையில் சிவன் சொத்து குலநாசம் என்று வசனம் பேசுவது மட்டும் போதாது. பெருமாள் கோவில் சொத்தை எப்படி மற்றவருக்கு எழுதி வைத்திருக்க முடியும். அனைத்து சொத்துகளையும் மீட்டதாக கூறிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு சொந்த கட்சி அலுவலகம் இருந்த கோவில் நிலத்தை எதற்காக மீட்கவில்லை. இந்த கோவில் நிலத்தின் மூல பத்திரம் காணவில்லை என்றும் இது தனி நபருக்கு சொந்தமானது என்றும் கூறி பாண்டிச்சேரி காவல் நிலையத்தில் போலியான சான்றிதழ் பெற்று இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
மேலும் படிக்க: பழனி, மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கைவரிசை.. ஸ்ரீரங்கம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு.. திமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு?




நில ஆக்கிரமிப்பில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை
இந்த நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான அடிப்படை ஆதாரங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவை காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் நிகழ்ந்த இந்த நில ஆக்கிரமிப்பில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விசாரணையில் எந்தவிதமான ஒளிவு மறைவும் இன்றி மிக சிறப்பாக விசாரணை நடத்தப்பட்டு அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முறைகேடுகளில் ஈடுபடுவோரை விட்டுவைக்கமாட்டோம்
கோவில் சொத்துகளில் இது போன்ற முறைகேடுகள் நடப்பதை முதல்வர் விஜயும், அவர் வழியில் வந்த நாங்களும், குறிப்பாக எனது ஸ்ரீரங்கம் தொகுதியில் இது போன்ற ஆக்கிரமிப்புகளை நான் விட்டு வைக்க மாட்டோம். எனது தொகுதி மக்களுக்காக முன்னாள் நின்று நான் போராடுவேன். இதில், தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திமுகவினர் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்தது தொடர்பான ஆவணங்களை அளித்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் படிக்க: டெங்குவை தடுக்க வந்தாச்சு க்யூடெங்கா தடுப்பூசி.. இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது… எப்போது தெரியுமா?