இடைத்தேர்தல் களம் சூடானது.. 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை இறக்கி திமுக, அதிமுகவை அதிரவைத்த முதல்வர் விஜய்!!
TVK Star Campaigners List Out: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’ சார்பில் 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய், தொல். திருமாவளவன், வைகோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கவுள்ளனர்.
சென்னை, செப்.19: தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் தீவிரமடைந்துள்ளது. இத்தேர்தலில் களம் காணும் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சார உத்திகளை வகுத்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’ சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் கூட்டணி இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: “தலித் மாணவர்கள் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது!”.. அமைச்சர் வன்னியரசு பகீர் குற்றச்சாட்டு!!
40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்:
வெளியிடப்பட்டுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யவுள்ளார். அவருடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி உள்ளிட்ட கூட்டணி இயக்கங்களின் முன்னணித் தலைவர்கள் பிரச்சாரம் செய்யவுள்ளனர். மேலும், அமைச்சர்களான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வன்னியரசு மற்றும் விஸ்வநாதன் உள்ளிட்ட 40 முக்கிய நிர்வாகிகள் இந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தொகுதிப் பொறுப்பாளர்கள்:
இடைத்தேர்தல் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, மதுராந்தகம் தொகுதிப் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளராக அருண்ராஜும் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். கூட்டணியின் சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகத குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: சென்னை விமான நிலையத்திற்கு வரப்போகும் மாற்றம்?.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தால் பரபரப்பு!!
தீவிரமடையும் பிரச்சாரம்:
நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, இரண்டு தொகுதிகளிலும் அடுத்தடுத்து பொதுக்கூட்டங்கள், திறந்தவெளி வாகனப் பிரச்சாரங்கள் மற்றும் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.