AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை விமான நிலையத்திற்கு வரப்போகும் மாற்றம்?.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தால் பரபரப்பு!!

Chennai Airport Privatization: சென்னை விமான நிலைய நிர்வாகத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடமிருந்து (AAI) வேறு நிறுவனத்திற்கு மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரந்தூர் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், தற்போதைய விமான நிலையத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சென்னை விமான நிலையத்திற்கு வரப்போகும் மாற்றம்?.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தால் பரபரப்பு!!
சென்னை விமான நிலையம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Sep 2026 08:56 AM IST

சென்னை, செப்.19: தமிழ்நாட்டின் சர்வதேச வான்வழி வாயிலாகத் திகழும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், தற்போது மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட பல முதன்மை விமான நிலையங்கள் ஏற்கனவே தனியார் நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுவிட்ட நிலையிலும், சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்கள் மட்டுமே மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தன. இந்தச் சூழலில், சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிர்வாக அமைப்பை (AAI) மாற்றி, புதிய நிர்வாகியிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருப்பது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. காஞ்சிபுரம் பரந்தூரில் திட்டமிடப்பட்ட ரூ.20,000 கோடி மதிப்பிலான புதிய பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தை விளைநிலங்கள் அழியும் எனக் கூறி தமிழக அரசு அண்மையில் கைவிட்ட நிலையில், தற்போது இயங்கி வரும் சென்னை விமான நிலையத்தையே தனியாருக்குத் தாரைவார்க்கும் வகையில் மாநில அரசே முன்னின்று கடிதம் எழுதியிருப்பது அரசியல் களத்திலும், அரசின் ஆதரவு மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: பாமக ஆதரவு யாருக்கு.. நெத்திப் பொட்டில் அடித்தது போல அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்!

முதலமைச்சரின் கோரிக்கையும் பின்னணியும்:

தொழில்துறை வளர்ச்சி மற்றும் முதலீடுகளுக்குப் பெயர் பெற்ற தமிழகத்திற்கு உலகத் தரம் வாய்ந்த, விரைவான நிர்வாகச் செயல்பாடுகள் கொண்ட விமான நிலையம் மிகவும் அவசியமானது என்ற அடிப்படையில் இக்கடிதம் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. பயணிகள் எண்ணிக்கை, விமானங்கள் இயக்கம், மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் சென்னை விமான நிலையம் மேலும் மேம்பட வேண்டும் என்றும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கீழ் செயல்படும் போது உள்கட்டமைப்பு பணிகளில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதாகவும் மாநில அரசு சுட்டிக்காட்டியுள்ளது. உதாரணத்திற்கு, புதிய முனையம் (T3) அமைக்கும் பணிகள் மற்றும் வாகனங்கள் வந்து செல்லும் வழிகள் அமைப்பதில் ஏற்பட்ட பெரும் தாமதங்கள் விமான நிலையச் செயல்பாட்டைப் பாதித்துள்ளதாகவும், டெல்லியில் உள்ள AAI தலைமையகத்திலிருந்து ஒப்புதல்கள் பெற தாமதமாவதால் நிர்வாகத்தில் தொய்வு ஏற்படுவதாகவும் கூறி, தற்போதைய ஏஏஐ (AAI) நிர்வாகத்திற்குப் பதிலாக வேறு திறம்படச் செயல்படும் நிர்வாகத்திடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் தனியார் ஆதிக்கம்:

மத்திய பாஜக அரசு நாட்டின் முக்கிய பொதுத்துறை விமான நிலையங்களை ‘தனியார்-பொதுத்துறை பங்களிப்பு’ (PPP) என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் கொள்கை நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களின் நிர்வாகப் பொறுப்புகள் ‘அதானி’ குழுமத்தின் கைவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றுமாறு தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கையானது, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விமான நிலையத்தையும் அதானி அல்லது ஜிஎம்ஆர் (GMR) போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குத் தாரைவார்ப்பதற்கே நேரடியாக வழிவகுக்கும் என்று சமூக ஆர்வலர்களும் அரசியல் விமர்சகர்களும் குற்றம் சாட்டுகின்றனர். மத்திய அரசின் தனியாருமயமாக்கல் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டிய மாநில அரசே அதற்குத் துணை போகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. தொடங்கப்படும் தேதி அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே !

ரகசியம் காக்கப்பட்ட கடிதம்:

பொதுவாக மத்திய அரசுக்கு அல்லது பிரதமருக்கு தமிழக முதல்வர் அனுப்பும் கடிதங்கள் மற்றும் கோரிக்கைகள் உடனுக்குடன் செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) மூலமாக ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் பகிரங்கமாகத் தெரிவிக்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதமே பிரதமருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் இக்கடிதத்தின் விவரங்கள் சுமார் ஒரு மாத காலத்திற்கு மேலாக வெளிவராமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. வழக்கமாக மத்திய அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்குத் தமிழகத்தில் இயங்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு மாறாகத் தமிழக அரசே நிர்வாகத்தை மாற்றித் தனியாருக்கு வழங்க மறைமுகமாக வழிவகை செய்து கடிதம் எழுதியிருப்பது, அதன் ஆதரவு மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கடுமையான அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.

Follow Us