பாமக ஆதரவு யாருக்கு.. நெத்திப் பொட்டில் அடித்தது போல அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்!
PMK Stance By Elections : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கு ம் என்பதை அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். அது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 6- ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற கேள்வி பரவலாக இருந்து வந்தது. இது தொடர்பான முக்கிய அறிவிப்பை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். இதில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவில்லை என்று ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இடைத்தேர்தலில் யாருக்கு பாமக ஆதரவு
இதில், இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்து தேர்தலை சந்தித்திருந்தது. இதில், 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகித்து வருகிறது. ஆனால், இடைத்தேர்தலில் பாமக யார் ஆதரவு அளிக்கும் என்ற கேள்வி எழுந்தது.
மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. தொடங்கப்படும் தேதி அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே !




தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் பாமக
ஏனென்றால், அதிமுக தலைமை பாஜக, அமமுக, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வந்தது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியை சந்தித்து தற்போது வரை ஆதரவு கோரவில்லை. இதனிடையே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி எம்எல்ஏ தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று நிலைபாட்டை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்வதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
பாமக தலைமைக்கு தூது விட்ட தவெக தலைமை
அத்துடன், தவெகவுக்கே, பாமக ஆதரவு அளிக்கும் என்றும் பரவலாக பேசப்பட்டு வந்தது. இப்படி இருந்த சூழ்நிலையில், தற்போது பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கும் ஆதரவு இல்லை என்ற பொதுவான நிலைப்பாட்டை முன்னெடுத்துள்ளது. இதனிடையே, மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமுதாய வாக்குகளை கைப்பற்றுவதற்காக பாமக தலைமைக்கு தவெக தலைமை மறைமுக தூது அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. எடப்பாடியின் சூறாவளி சுற்றுப்பயண தேதி அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே !