ரூ.100 கோடி லஞ்ச வழக்கு.. அன்பில் மகேஸிடம் 7 மணி நேரம் நீடித்த அதிரடி விசாரணை.. தோண்டி துருவிய போலீசார்!
CCB interrogated Anbil Mahesh Poyyamozhi : தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ. 100 கோடி லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸிடம் மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் ரூ. 100 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் மற்றும் சென்னையில் அன்பில் மகேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் சென்னை மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு 181 ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையில், சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் முன் இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆஜராகினார்.
அன்பில் மகேஸிடம் 7 மணி நேரம் விசாரணை
அவரிடம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணையானது மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, அன்பில் மகேஷிடம் குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சென்னை டிநகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க: காமராஜர் காலை உணவு திட்டம் 2.0.. முதல்வர் தலைமையில் அதிரடி ஆலோசனைக் கூட்டம்.. ஆக்சனில் இறங்கிய ஜோசப் விஜய்!




தனியார் பள்ளி அங்கீகாரத்துக்கு ரூ. 100 கோடி லஞ்சம்
அந்த புகாரில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடி வரை பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, பதிவு செய்யப்படாத தனியார் பள்ளிகள் சங்கத்தை நடத்தி வந்த திமுக பிரமுகரான பி.டி. அரசகுமார், அவரது உறவினர் ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வடபழனி மற்றும் போரூரில் வைத்து தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகளை சந்தித்து பணம் வசூலித்தது தெரியவந்தது. அத்துடன், அவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
இதில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில், அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கானது தற்போது ஊழல் வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், 177 பேர் புகார் அளித்துள்ள நிலையில் 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு 61 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில், தொடர்புடைய திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: பிரசாதத்தை சாப்பிட்ட வளர்ப்பு நாய்.. ஆத்திரத்தில் மருமகளை தீர்த்து கட்டிய மாமனார்.. தஞ்சாவூரில் நிகழ்ந்த வினோத கொலை!