மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. எடப்பாடியின் சூறாவளி சுற்றுப்பயண தேதி அறிவிப்பு!
EPS Campaigning Maduranthakam - Dharapuram : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வருகிற 24- ஆம் தேதி முதல் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் வருகிற அக்டோபர் 6- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் தொடங்கி முடிவடைந்துள்ளது. விரைவில், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், மேற்கண்ட இரு சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வருகிற 24- ஆம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
24- ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி வருகிற செப்டம்பர் 24- ஆம் தேதி ( வியாழக்கிழமை) முதல் அக்டோபர் 3- ஆம் தேதி ( சனிக்கிழமை) வரை அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் செப்டம்பர் 24, 25 மற்றும் அக்டோபர் 3- ஆம் தேதியும், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் செப்டம்பர் 27, 28 மற்றும் அக்டோபர் 2- ஆம் தேதியும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
மேலும் படிக்க: குற்ற புலனாய்வு போலீஸ் விசாரணையில் நடந்தது என்ன? அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரபரப்பு விளக்கம்!




எடப்பாடி சுற்றுப்பயண வழித்தடம் விரைவில் அறிவிப்பு
இந்த இரு தொகுதிகளில் எடப்பாடி கே. பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் வழித்தடங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். இந்த பயணத் திட்டத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட தொகுதியை சேர்ந்த தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் மேற்கண்ட இரு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர்.
அதிமுகவுக்கு மிக முக்கியமான இடைத்தேர்தல்
இவர்கள் இருவரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததன் காரணமாக, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தொகுதியை மீண்டும் தன்வச படுத்துவதற்காக அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதிக்கு கணிதா சம்பத் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு பானுமதி ஆகிய இரு பெண்களை வேட்பாளர்களாக எடப்பாடி அறிவித்துள்ளார். இதனால், இந்த இடைத்தேர்தல் அதிமுகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: 10 முதல் 20% தள்ளுபடி – ரேசன் கடையில் ‘வெற்றி’ பிராண்டில் மளிகை பொருட்களை விற்க திட்டம்