குற்ற புலனாய்வு போலீஸ் விசாரணையில் நடந்தது என்ன? அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரபரப்பு விளக்கம்!
Anbil Mahesh Poyyamozhi : தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ. 100 கோடி லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில், சென்னை மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணை குறித்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதற்காக பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி. அரசகுமார், ஆரோக்கியசாமி, சுரேஷ், திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் மற்றும் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மீது சென்னை மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக அன்பில் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்து, இது தொடர்பாக இன்று அவரிடம் குற்ற புலனாய்வு போலீசார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து, விசாரணை தொடர்பாக அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கேட்ட 295 கேள்விகளில் 246 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். இதில், எஞ்சிய கேள்விகளை அடுத்த வாரம் கேட்பதற்காகவும், அதற்கு நாங்கள் அழைக்கும் போது வர வேண்டும் என்று கூறினர். அதன்படி, நானும் வருவதாக தெரிவித்துள்ளேன். இந்த கேள்விகளில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் இருந்தன. அதனை சரி செய்து நான் அவர்களிடம் வழங்கினேன். இது தொடர்பாக என்னிடம் கையெழுத்தும் பெற்றுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 118 ஆவணங்கள் விவரம்
எனது வீடு உள்ளிட்ட 9 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 118 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அமைச்சராக இருந்தபோது நான் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டங்கள், 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான ஆவணங்கள், பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் உள்ளிட்ட ஆவணங்கள் ஆகும். அவர்கள் மேற்கொண்டு கேட்கப்படும் 40 கேள்விகள் என்ன என்பது எனக்கு தெரியாது.
மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. தொடங்கப்படும் தேதி அறிவிப்பு.. முழு விவரம்!




முழுக்க… முழுக்க… பொய்யான வழக்கு
தற்போது வரை கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் பொறுமையாக பதில் அளித்துள்ளேன். ஏனென்றால், இந்த வழக்கு முழுக்க… முழுக்க… பொய்யான வழக்காகும். எனவே, எனக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாக அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் என்னிடம் பணம் கொடுத்தது தொடர்பாக எதுவும் பேசவில்லை. இது தொடர்பாக அவர்களிடம் தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நான் தெரிவித்துள்ளேன்.
வழக்கு விசாரணையில் விளக்கம் அளிக்க விரும்பவில்லை
இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் போது இது குறித்து நான் விளக்கம் அளிக்க முடியாது என்று தெரிவித்தார். அப்போது, உடன் இருந்த ஒருவர், இந்த வழக்கில் ஊடகங்கள் வாயிலாக தவறான தகவலை பரப்புவதற்காக பல கோடி லஞ்சம் என தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. எனவே, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ரூ.100 கோடி லஞ்ச வழக்கு.. அன்பில் மகேஸிடம் 7 மணி நேரம் நீடித்த அதிரடி விசாரணை.. தோண்டி துருவிய போலீசார்!