35 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா சென்சார் விதிகளில் மாற்றம் – புதிய மாற்றங்கள் என்னென்ன?
New Film Censor Rules : இந்தியாவில் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய வழிகாட்டுதல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. திரைப்படங்களில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான காட்சிகள், ஆபாசம், மதம் மற்றும் சமூகப் பிரிவுகள் குறித்த காட்சிகள், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு இந்த வழிகாட்டுதல்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள் வெளியாவதில் தணிக்கைத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தணிக்கைத் துறையில் சமுதாயத்தில் பல்வேறு தரப்பிலான நபர்கள் அங்கம் வகிப்பர். திரைப்படங்களில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருந்தால், தேச அமைதிக்கும் குழப்பம் விளைவிக்கக் கூடிய காட்சிகள் இருந்தால் அவற்றை நீக்க சொல்லி, அதற்கேற்ப தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். ஒரு படம் குழந்தைகள் பார்க்க உகந்ததா அல்லது வயது வந்தோருக்கான படமா என்பதை தணிக்கைத் துறை முடிவு செய்யும்.
35 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா தணிக்கை விதிகளில் மாற்றம்
இந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தணிக்கை சான்றிதழ் வழங்கும் முறையில் முக்கிய மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. திரைப்படத் தணிக்கை மற்றும் சான்றிதழ் வழங்கும் முறையில், மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வன்முறை மற்றும் குற்றச் செயல்களைப் பெருமைப்படுத்தும் காட்சிகள் உருவாக்கக் கூடாது. குற்றவியல் செயல்களைச் செய்யும் முறைகளைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சீண்டல்கள் அல்லது இது போன்ற பிற பெண்கள் தொடர்பான கொடூரக் காட்சிகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஆனந்தியின் பேச்சு மோதலாகுமா..? லட்சுமி பிரியா – ஆனந்தியின் மத்தியில் வலுக்கும் மோதல்!!




போதைப்பொருள் பயன்பாடு அல்லது கடத்தல் தொடர்பான காட்சிகள் இடம்பெறும் படங்களில், “சட்டவிரோத போதைப்பொருட்கள் ஆரோக்கியத்தை அழித்து, நிச்சயம் சிறைத் தண்டனைகளை பெற்றுத் தரும். போதைப்பொருட்களைத் தவிர்ப்போம்” என்ற வாசகம் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், வன்முறைச் செயல்களில் குழந்தைகளை பாதிக்கப்பட்டவர்களாகவோ, குற்றவாளிகளாகவோ அல்லது சாட்சிகளாகவோ சித்தரிக்கும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்துதல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான அநாவசியக் கொடுமைகள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலோ, அல்லது வெளிநாடுகளுடனான இந்தியாவின் நட்புறவில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலோ உள்ளடக்கங்கள் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள்
திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் அல்லது அவர்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கதைக்கு அவசியமானதாக இருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான காட்சிகளை மிகக் குறைந்த அளவில் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும். அதிலும் கொடூரமான அல்லது வெளிப்படையான விவரங்களுடன் அந்தக் காட்சிகளை படமாக்குவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : Vettuvam: மக்களுக்கான தலைவனை தேந்தெடுக்கும் போட்டி.. வெளியானது ‘வேர்ல்ட் ஆப் வேட்டுவம்’ கிளிம்ப்ஸ்!
மேலும், வன்கொடுமை, உறவு சார்ந்த சில காட்சிகளும் கதையின் கருப்பொருளுக்கு உண்மையிலேயே அவசியமானதாக இருந்தால் மட்டுமே குறைந்த அளவில் இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திரைப்படங்களில் ஆபாசமான உள்ளடக்கங்கள், அநாகரிகமான காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளும் தொடர்கின்றன.
குறிப்பாக நீதிமன்றங்களை அவமதிக்கும் அல்லது அவற்றின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலான காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெறக்கூடாது என வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றங்கள் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான உள்ளடக்கங்கள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான விதிகளின் கீழ் பரிசீலிக்கப்படலாம் என்றும் விளக்கப்பட்டுள்ளது.