எழுந்த எதிர்ப்புகள்.. மேல்மா சிப்காட் நில எடுப்பு அறிவிக்கை வாபஸ் பெற்ற தமிழக அரசு..
Melma Project Withdrawn: ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு செப்டம்பர் 1ஆம் தேதி நில எடுப்பு அறிவிக்கை வெளியானது அரசியல் ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளானது. தற்போது அந்த அறிவிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 19, 2026: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்காவின் 3ஆம் கட்ட விரிவாக்கத்திற்காக 22.16 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்துவதற்காக செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.
மேல்மா திட்டத்தை திரும்ப பெற்ற தமிழக அரசு:
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 1ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழ் எண் 369-ல், தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டத்தின் 3(1) பிரிவின் கீழ், செய்யாறு வட்டம் மேல்மா கிராமம் அலகு 1, பிளாக் 2-ல் உள்ள 22.16 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த அறிவிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் அந்த அறிவிக்கை தற்போது திரும்பப் பெறப்படுவதாக சிப்காட் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பாமக ஆதரவு யாருக்கு.. நெத்திப் பொட்டில் அடித்தது போல அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்!
செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவின் 3ஆம் கட்ட விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் சுமார் 3,000 ஏக்கர் முதல் 3,174 ஏக்கர் வரையிலான விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக, 2023ஆம் ஆண்டு ஜூலை முதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விவசாய நிலங்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி போராட்டங்கள் நடைபெற்றன.
ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு; பின் ஒரு பேச்சு – அரசியல் கட்சிகள் விமர்சனம்:
இந்த விவகாரம் தமிழக அரசியலிலும் முக்கிய விவாதமாக இருந்து வந்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு செப்டம்பர் 1ஆம் தேதி நில எடுப்பு அறிவிக்கை வெளியானது அரசியல் ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளானது. தற்போது அந்த அறிவிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், சிப்காட் திட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகள் உள்ளிட்டோர் மீது முந்தைய ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட அமைதியான போராட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தன.
மேலும் படிக்க: தீவிர கண்காணிப்பில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு.. உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கா?
இந்நிலையில், மேல்மா பகுதியில் 22.16 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்துவதற்கான குறிப்பிட்ட அறிவிக்கை மட்டும் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், சிப்காட் 3ஆம் கட்ட விரிவாக்கம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.