சேலத்தில் அடுத்தடுத்து கொலை- தற்கொலை.. பகீர் கிளப்பும் பின்னணி.. போலீசார் தீவிர விசாரணை!
Salem Crime News : சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவனை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தொழிலாளி தானும் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக இரு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் கூலி தொழில் பார்த்து வருகின்றனர். தம்பதிக்கு தவுசிக் ( 15 வயது) என்ற மகன் இருந்தார். இவர், கே. ஆர். தோப்பூர் அரசு பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், தவுசிக்கும், இடங்கண சாலை அருகே உள்ள சிட்டனூரை சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் சிவராஜ் ( 24 வயது) என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில், சம்பவத்தன்று மாணவன் தவுசிக் பள்ளி சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது, மாணவன் தவுசிக்கை, சிவராஜ் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்டு வெளியே அழைத்து சென்றுள்ளார். பின்னர், வெகு நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்கள் இருவரையும் தேடத் தொடங்கினர். பல்வேறு இடங்களில் தேடியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவன்
பின்னர், இது தொடர்பாக மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் காணாமல் போன இருவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், கே. ஆர். தோப்பூர் சாலையில் உள்ள மேட்டுக்காடு பகுதியில் உள்ள இரும்பாலைக்கு சொந்தமான இடத்தில் மாணவன் தவுசிக் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதை அறிந்த பெற்றோர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவன் தவுசிக்கின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது, வீட்டில் இருந்த தங்களது மகனை அழைத்து சென்ற சிவராஜ் தான் கொலை செய்திருப்பார் என்று பெற்றோர் கண்ணீர் மல்க கூச்சலிட்டவாறு அழுதனர்.
மேலும் படிக்க: டெங்குவை தடுக்க வந்தாச்சு க்யூடெங்கா தடுப்பூசி.. இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது… எப்போது தெரியுமா?




மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த தொழிலாளி
தொடர்ந்து, மாணவரின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவனை கொலை செய்த சிவராஜை தேடி வருகின்றனர். இதில், தாரமங்கலம் அருகே உள்ள பெரியப்பட்டி சுடுகாடு பகுதியில் சிவராஜ் மரத்தில் தூக்கிட்டவாறு தற்கொலை செய்து பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன
போலீசாரின் விசாரணையில், நண்பர்களாக பழகி வந்த இருவரிடையே ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் அல்லது ஒரின சேர்க்கையின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக, மகுடஞ்சாவடி போலீசார் கொலை வழக்கும், தாரமங்கலம் போலீசார் தற்கொலை வழக்கம் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி பயங்கரம்.. மாணவர்-மாணவி பலி.. கரூரில் சோகத்தில் முடிந்த பயணம்!