காலி மதுபாட்டிலை திருப்பி தந்தபோது விபரீதம்!.. கிருஷ்ணகிரியில் வாலிபர் கல்லால் அடித்து படுகொலை..
Krishnagiri Shocking Murder: கிருஷ்ணகிரியில் காலி மதுபாட்டிலைத் திருப்பித் கொடுத்து பணம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், ஊட்டி வாலிபரை கல்லால் அடித்துக் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவியில் பதிவான இக்கோடூரக் கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரையும் அவரது தந்தையையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, செப்டம்பர் 19: கிருஷ்ணகிரி அருகே காலி மதுபாட்டிலைத் திருப்பி தந்து பணம் வாங்கும் போது ஏற்பட்ட வாக்குவாதம், கொடூரக் கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்த 33 வயதான அருண்குமார் என்பவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் வேளாண் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். வழக்கம்போல் பணி முடிந்து தனது நண்பர்களுடன் டாஸ்மாக் கடை அருகே உள்ள அனுமதி பெறாத பாரில் மது அருந்தியபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தகராறில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: மீண்டும் வெளிநாடு பறக்கும் முதல்வர் விஜய்!.. சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்கத் திட்டம்!!..
தகராறும் கொடூரக் கொலையும்:
சம்பவத்தன்று இரவு அருண்குமார் தனது நண்பர்களான தீபன்ராஜ், இன்பசேகர், மதன் மற்றும் பாரதிராஜா ஆகியோருடன் இணைந்து சானம்பட்டி சாலையில் உள்ள குறிஞ்சி நகர் டாஸ்மாக் கடை அருகே செயல்பட்டு வந்த அனுமதி பெறாத பாரில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது டாஸ்மாக் கடை மூடப்பட்ட நிலையில், அருண்குமாரும் அவரது நண்பர் தீபன்ராஜும் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களைக் கொடுத்து வைப்புத் தொகையைப் பெறுவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கார்த்திக் என்பவருக்கும் அவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை கோவிந்தராஜ் ஆகியோர் இணைந்து அருண்குமாரைத் தாக்கியுள்ளனர்.
சிசிடிவியில் பதிவான படுகொலை காட்சி:
இரு தரப்பினரையும் நண்பர்கள் சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். டாஸ்மாக் கடையிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஆத்திரம் தீராத கார்த்திக் பின்னால் தொடர்ந்து வந்து திடீரென அருண்குமாரைக் கல்லால் தாக்கியுள்ளார். இதில் பின்பக்கக் கழுத்தில் பலத்த காயமடைந்த அருண்குமார் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்தார். கீழே விழுந்த அருண்குமாரைக் கார்த்திக் மீண்டும் மீண்டும் தலையில் கல்லால் கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தின் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க: சென்னை விமான நிலையத்திற்கு வரப்போகும் மாற்றம்?.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தால் பரபரப்பு!!
காவல்துறை தீவிர விசாரணை:
காயங்களுடன் மயங்கிக் கிடந்த அருண்குமாரை அவரது நண்பர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துக் தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.