கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி பயங்கரம்.. மாணவர்-மாணவி பலி.. கரூரில் சோகத்தில் முடிந்த பயணம்!
Karur Car Accident Students Dies : கரூர் மாவட்டத்தில் மரத்தில் கார் மோதிய விபத்தில் அதில் பயணித்த கல்லூரி மாணவர் மற்றும் மாணவி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த 3 மாணவிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கௌதம் ( 21 வயது). இவர், இதே மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் 3- ஆம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்த நிலையில், மாணவர் கௌதம் தனது கல்லூரியில் தன்னுடன் படித்து வரும் இதே மாவட்டம், மோகனூர் பகுதியை சேர்ந்த காமினி, தேவதர்ஷினி, மதுப்பிரியா, அனுசியா ஆகிய 4 மாணவிகளுடன் கரூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். இந்த காரை மாணவர் கௌதம் ஓட்டிச் சென்றார். காரானது கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி எதிரே சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கார் திடீரென மாணவர் கௌதமின் கட்டுப்பாட்டை இழந்து தறிகட்டு ஓடத் தொடங்கியது.
மரத்தில் மோதிய கார்- பலத்த காயமடைந்த மாணவ,மாணவிகள்
இதில், நிலை தடுமாறிய கார் சாலை ஓரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரின் உள்ளே இருந்த கௌதம் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதேபோல, 4 மாணவிகளும் பலத்த காயமடைந்து சத்தமிட்டனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, அருகில் உள்ள வாங்கல் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: ரூ.100 கோடி லஞ்ச வழக்கு.. அன்பில் மகேஸிடம் 7 மணி நேரம் நீடித்த அதிரடி விசாரணை.. தோண்டி துருவிய போலீசார்!
அடுத்தடுத்து உயிரிழந்த மாணவ, மாணவி
அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய மாணவர் மற்றும் மாணவிகளை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே மாணவர் கௌதம் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, மாணவி மது பிரியாவும் பரிதாபமாக உயிர் இழந்தார். தொடர்ந்து, மற்ற மூன்று மாணவிகளும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து, மாணவர் கௌதம் மற்றும் மாணவி மது பிரியா ஆகியோரின் சடலங்கள் உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வாங்கல் போலீசார் வழக்கப்பதிந்து விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக, மாணவரின் பெற்றோர் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரியில் ஒன்றாக படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகள் காரில் சென்ற நிலையில், விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: டெங்குவை தடுக்க வந்தாச்சு க்யூடெங்கா தடுப்பூசி.. இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது… எப்போது தெரியுமா?