ஆசிய விளையாட்டு போட்டிக்கு முன் அடுத்தடுத்து சிக்கல்: தங்கும் அறைகள் கிடைக்காமல் தவிக்கும் வீரர்கள்..
Asian Games 2026: இந்திய வீரர்களும் தங்குமிட சிக்கலை எதிர்கொண்ட நிலையில், சுமார் 35 இந்திய வீரர்கள் ஏற்கனவே ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பொறுப்பாளர் சஹ்தேவ் யாதவ் தெரிவித்துள்ளார். பேட்மிண்டன் அணியும் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளது. தங்குமிட பற்றாக்குறை ஏற்பட்டால் இந்திய வீரர்களுக்கு உதவுவதற்காக நகோயாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் உதவியையும் மத்திய விளையாட்டு அமைச்சகம் நாடியுள்ளது.
செப்டம்பர் 19, 2026: ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், போட்டிக்கு முன்பாகவே அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிகாரப்பூர்வமாக இன்று போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் ஏற்கனவே சில போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகளில் குழப்பம் நிலவி வரும் நிலையில், தற்போது சக்திவாய்ந்த புயல் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்படும் விளையாட்டு போட்டிகள்?
‘டுஜுவான்’ எனப்படும் வெப்பமண்டல புயல் மணிக்கு சுமார் 90 கி.மீ. வேகத்தில் காற்றும், மணிக்கு 126 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் சூழலையும் உருவாக்கியுள்ளது. இந்த புயல் ஞாயிற்றுக்கிழமை ஐச்சி-நகோயா அருகே நகரக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் கனமழை மற்றும் பலத்த காற்று ஏற்பட்டால் வீரர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட வேண்டிய நிலை உருவாகலாம்.
மேலும் படிக்க: செமி பைனலில் வங்கதேசத்துடன் மோதல்.. போட்டி எப்போது, எங்கு நடைபெறுகிறது?
ஆசிய விளையாட்டு போட்டியின் துணைத் தலைவரும் நகோயா மேயருமான இச்சிரோ ஹிரோசாவா, சாதாரண மழை பெய்தால் போட்டிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும், கனமழை காரணமாக அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டால் வீரர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தங்கும் அறைகள் கிடைக்காமல் தவிக்கும் வீரர்கள்:
இதனிடையே, போட்டிக்கான தங்குமிட ஏற்பாடுகளிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வீரர்களுக்காக பாரம்பரிய ‘அத்லெட்ஸ் வில்லேஜ்’ அமைக்கப்படாமல், கண்டெய்னர் குடியிருப்புகள், ஹோட்டல்கள் மற்றும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல் உள்ளிட்ட இடங்களில் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அறைகள் கிடைக்காமல் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய வீரர்களும் தங்குமிட சிக்கலை எதிர்கொண்ட நிலையில், சுமார் 35 இந்திய வீரர்கள் ஏற்கனவே ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பொறுப்பாளர் சஹ்தேவ் யாதவ் தெரிவித்துள்ளார். பேட்மிண்டன் அணியும் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்திய வீரர்களுக்கு உதவ முன்வந்த 2,000 குடும்பங்கள்:
தங்குமிட பற்றாக்குறை ஏற்பட்டால் இந்திய வீரர்களுக்கு உதவுவதற்காக நகோயாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் உதவியையும் மத்திய விளையாட்டு அமைச்சகம் நாடியுள்ளது. சுமார் 2,000 குடும்பங்களை இந்திய தூதரகம் அணுகியுள்ளதாகவும், பலர் உதவ முன்வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ஆடும் லெவனில் இருந்து சாம்சன் நீக்கப்பட்டது ஏன்..? பயிற்சியாளர் காம்பீர் விளக்கம்!
மேலும், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய கொடியேற்ற நிகழ்ச்சியும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. ஏற்பாட்டுக் குழுவினரிடையே ஏற்பட்ட தகவல் தொடர்பு குழப்பமே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் ஏற்பாடுகள் குறித்து விமர்சனம் தெரிவித்துள்ள நிலையில், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் சமூக வலைதளங்களில் நிலைமை அரசியலாக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
இந்தப் போட்டிகளில் சுமார் 11,000 வீரர்கள் 43 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர். போட்டிகள் அக்டோபர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.