சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்க 4 கடற்கரைகளுக்கு அனுமதி.. காவல்துறை பிறப்பித்த முக்கியக் கட்டுப்பாடுகள்!
Chennai Vinayagar Idol Immersion: சென்னையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்பட்ட 1,562 சிலைகளை கரைப்பதற்குப் பாலாவாக்கம், எண்ணூர், பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகர், திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரைகளுக்குச் சென்னை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 22,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மாசுக் கட்டுப்பாடு மற்றும் அமைதிக்கான 13 விதிகளையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை, செப்.19: கடந்த செப்டம்பர் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகளைச் சென்னை பெருநகரக் காவல் துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளைக் கருத்தில் கொண்டு, எந்தெந்தக் கடற்கரைகளில் சிலைகளைக் கரைக்கலாம் என்பதில் காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. இந்நிலையில், பாலாவாக்கம், எண்ணூர், பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய நான்கு கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்குச் சென்னை காவல்துறை அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதையும் படிக்க: சென்னை விமான நிலையத்திற்கு வரப்போகும் மாற்றம்?.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தால் பரபரப்பு!!
சிலைகள் கரைக்கும் இடங்கள்:
சென்னையில் காவல் துறையின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் மொத்தம் 1,562 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களின்படி, அடுத்த ஆண்டு முதல் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் மற்றும் நீலாங்கரை கடற்கரைகளில் சிலைகளைக் கரைக்கத் தடை விதிக்கப்படவுள்ள நிலையில், இந்த ஆண்டு மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வழக்கமாகச் சிலைகள் கரைக்கப்படும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்திற்குப் பதிலாக, குடியிருப்பு பகுதிகள் இல்லாத பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகர் கடற்கரைப் பகுதி புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் பாலாவாக்கம், எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய இடங்களிலும் இன்றும் நாளையும் (சனி மற்றும் ஞாயிறு) சிலைகளைக் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
13 முக்கிய வழிகாட்டுதல்கள்:
சிலைகள் அமைப்பது முதல் நீர்நிலைகளில் கரைப்பது வரை அமைதியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, 13 முக்கியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் ரசாயனச் சாயங்கள் இல்லாத சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மூலப்பொருட்களைக் கொண்டே சிலைகள் செய்யப்பட வேண்டும் என்பதும், பீடத்திலிருந்து சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை வைக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ அல்லது மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலோ எவ்வித முழக்கங்களையும் எழுப்பக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மீண்டும் வெளிநாடு பறக்கும் முதல்வர் விஜய்!.. சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்கத் திட்டம்!!..
ஊர்வலக் கட்டுப்பாடுகள்:
தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 128 சிலைகள் பாலாவாக்கம் கடற்கரையிலும், சென்னை பெருநகரக் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 25 சிலைகளும் முதல் நாளான சனிக்கிழமையன்று கரைக்கப்படவுள்ளன. பெரும்பாலான சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட உள்ளதால், நகரம் முழுவதும் 22,000 காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும் வரை, ஒவ்வொரு சிலைக்கும் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் காவலர் உடனே செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்றும், காவல்துறை அனுமதித்த நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே சிலைகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.