மதுரையில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு.. அரசு பள்ளி பின்புறம் கிடந்த இளைஞர் சடலம்.. பரபரக்கும் பின்னணி!
Madurai Young Man Murder : மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் பின் புறம் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பின்புறம் இளைஞர் ஒருவர் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், இது தொடர்பாக மேலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், உதவி காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இளைஞரின் சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர் சிவகங்கை மாவட்டம், மேலப்பூவண்டி பகுதியை சேர்ந்த செல்ல பாண்டியன் மகன் செல்லதுரை என்பது தெரியவந்தது.
வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை
இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மேலூர் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் தனது அக்காள் செல்வ பிரியா வீட்டில் தங்கி இருந்து தனது உறவினரான முருகன் என்பவரின் மெக்கானிக் கடையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த செல்லதுரை, தனது அக்காளிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது சகோதரி மற்றும் உறவினர்கள் அந்த பகுதி முழுவதும் தேடத் தொடங்கினர்.
மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி பயங்கரம்.. மாணவர்-மாணவி பலி.. கரூரில் சோகத்தில் முடிந்த பயணம்!




கொலைக்கான காரணம் குறித்து விசாரணை
ஆனால், செல்லதுரையை கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக, அவரது உறவினர் காலையில் வந்து விடுவார் என்று சாதாரணமாக எண்ணி உள்ளனர். ஆனால், அவர் மேலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில், மேலூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இவரை கொலை செய்தவர் யார். எதற்காக இந்த கொலை நடைபெற்றது என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்டம்
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், செல்லதுரையின் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில், கொலையாளி சிக்கும் நிலையில்தான், இந்த சம்பவத்துக்கான காரணம் தெரிய வரும். அரசுப் பள்ளியின் பின்புறம் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சேலத்தில் அடுத்தடுத்து கொலை- தற்கொலை.. பகீர் கிளப்பும் பின்னணி.. போலீசார் தீவிர விசாரணை!