திடீரென பெய்த மழை.. குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியா?
Courtallam Current situation : தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பறித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் இது போன்ற வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதே போல, தென்காசி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதற்கு முன்னதாக வெயிலின் தாக்கத்தால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து குற்றால சீசன் முடிவுறும் நிலைக்கு வந்தது.
அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
ஆனால், திடீரென பெய்த மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிக அளவு கொட்ட தொடங்கியது. இதன் காரணமாக, குற்றால அருவிகளை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில், நேற்று கிழமை ( செப்டம்பர் 20- ஆம் தேதி) மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிக்குள் பலத்த மழை பெய்தது.
மேலும் படிக்க: இர்ஃபான் கார் மோதி பெண் பலியான வழக்கு – ரூ.30 லட்சம் வழங்க உத்தரவு




தண்ணீரில் அடித்து வரப்பட்ட விஷ பாம்புகள்- பாறை கற்கள்
இதன் காரணமாக, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்து காணப்பட்டது. இதில், ஐந்தருவியில் உள்ள அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக, அன்று மாலை 6 மணி முதல் சுற்றுலா பயணிகள் யாருக்கும் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. தண்ணீர் அதிக அளவு கொட்டி வருவதால், சிறியது முதல் பெரிய அளவிலான கற்கள், மரத்துண்டுகள், மலைப்பாம்பு, விஷ பாம்பு மற்றும் விஷ சந்துகள் ஆகியவை தண்ணீரில் அடித்து வரப்படுகின்றன.
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி உண்டா
இவற்றால் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் தண்ணீர் அதிக அளவு விழுவதால் சுற்றுலாப் பயணிகள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக குளிப்பதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதே போல, மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் இரவு 8 மணி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, குற்றாலத்துக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அருவிகளில் தண்ணீர் வரத்தை குறைய தொடங்கியதும் காவல் துறை அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: டாஸ்மாக் கடைகளில் புதிதாக விற்பனைக்கு வரும் 25 புது மதுபானங்கள் – வெளியான தகவல்