டாஸ்மாக் கடைகளில் புதிதாக விற்பனைக்கு வரும் 25 புது மதுபானங்கள் – வெளியான தகவல்
TASMAC New Liquor Plans : தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் புதிதாக 25 வகை மதுபானங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது புதிய மதுபானங்களின் விலை நிர்ணயம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, செப்டம்பர் 20 : தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் புதிதாக 25 வகை மதுபானங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய மதுவகைகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிந்த பிறகு, அடுத்த கட்டமாக டாஸ்மாக் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதல் பெறப்படும். அதன்பின்னர் புதிய மதுபானங்கள் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.
டாஸ்மாக் கடைகளில் புதிதாக விற்பனைக்கு வரும் 25 மதுபானங்கள்
தமிழகத்தில் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பிராந்தி, விஸ்கி, வோட்கா உள்ளிட்ட இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனுடன் பீர் மற்றும் ஒயின் வகைகளும் கிடைக்கின்றன. டாஸ்மாக் நிறுவனம் தேவைக்கேற்ப பல்வேறு மதுபான ஆலைகளிடமிருந்து பொருட்களை கொள்முதல் செய்து வருகிறது. பீர் வகைகள் 7 ஆலைகளிடமிருந்தும், ஒயின் ஒரு ஆலையிடமிருந்தும் பெறப்படுகின்றன. இதர மதுபானங்கள் 11 ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சமூக வலைதளங்களில் பரவும் மதுரை மீனாட்சி அம்மன் மூலஸ்தான வீடியோ – காவல்துறையினர் தீவிர விசாரணை




டாஸ்மாக் கடைகளில் தமிழகத்தில் தயாரிக்கப்படும் 174 வகை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர 40 வகை பீர் மற்றும் 4 வகை ஒயினும் விற்பனையில் உள்ளன. பிற மாநிலங்களில் இருந்து 6 வகை மதுபானங்கள், 5 வகை பீர் மற்றும் 5 வகை ஒயினும் கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும், டாஸ்மாக் நிறுவனம் 538 வெளிநாட்டு மதுவகைகளை இறக்குமதி செய்து, வணிக வளாகங்களில் செயல்படும் மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு அவ்வப்போது புதிய மதுபானங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டு வருவது தொடர்பாக மதுபான உற்பத்தியாளர்களுடன் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், அதில் இருந்து 25 புதிய மதுவகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க : ஏஐ மூலம் 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை பிடித்த சென்னை போலீஸ் – பரபரப்பு சம்பவம்
தேர்வு செய்யப்பட்டுள்ள 25 மதுவகைகளுக்கான விலையை நிர்ணயிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விலை இறுதி செய்யப்பட்டதும், அதற்கான நிர்வாக ஒப்புதல் பெறப்படும். டாஸ்மாக் இயக்குநர்கள் குழு ஒப்புதல் வழங்கிய பிறகு, புதிய மதுவகைகளை சில்லறை விற்பனைக் கடைகளில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விலை நிர்ணயம் மற்றும் நிர்வாக ஒப்புதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் நிறைவு பெற்ற பிறகு, 25 புதிய மதுவகைகளும் டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.