சமூக வலைதளங்களில் பரவும் மதுரை மீனாட்சி அம்மன் மூலஸ்தான வீடியோ – காவல்துறையினர் தீவிர விசாரணை
Madurai Meenakshi Amman Temple : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் சிலர் மூலஸ்தானத்தை வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை, செப்டம்பர் 20 : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் சிலர் மூலஸ்தானத்தை வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த செப்டம்பர் 17, 2026 அன்று 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சமூக வலைதளங்களில் பரவும் மதுரை மீனாட்சி அம்மன் மூலஸ்தான வீடியோவால் சர்ச்சை
முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 12 ஆண்டுகள் கழித்து கடந்த 2021 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வீர வசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மண்டபத்தை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அப்போதைய திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்துவீர வசந்தராயர் மண்டபம் ரூ.30 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 17, 2026 அன்று குடமுழுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : தவெக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பிற கட்சித் தலைவர்கள்.. எந்த சட்ட அடிப்படையில் சாத்தியம்?.. அதிமுக சரமாரி கேள்வி!




வழக்கமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள செல்போன் சேகரிப்பு மையங்களில் கொடுத்துவிட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும். இந்த நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில் கூட்ட நெரிசலை சமாளிக்க பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கோவிலுக்கு செல்போன் எடுத்துச் சென்ற சிலர் அம்மன் சன்னதியை தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதனை அவர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பாக கோயில் நிர்வாகத்திடமும், காவல்துறையிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மீனாட்சியம்மன் கோயில் மூலஸ்தானத்தை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவத்தை அடுத்து பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டு, வழக்கம் போல் கோயிலுக்கு வெளியே செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிக்க : தருமபுரி அருகே பயங்கரம்.. மண்சரிவில் உருண்ட பாறை ரயில் மீது மோதி விபத்து.. ஓட்டுநரின் திறமையால் தப்பிய பயணிகள்!!
இதற்கிடையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இதையடுத்து இலவச தரிசன காலத்தை செப்டம்பர் 23, 2026 வரை நீட்டித்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.