Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!
Tamil Nadu Rain today: வடக்கு கடலோர ஆந்திரா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, இன்று நீலகிரி, கோவை, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னையில் மாலையில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.
சென்னை, செப்.21: தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக பகுதிகள் வழியாக ஒரு வடக்கு தெற்கு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
இதையும் படிக்க : ஏஐ மூலம் 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை பிடித்த சென்னை போலீஸ் – பரபரப்பு சம்பவம்
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (செப்.21) நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகதில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
தொடர்ந்து, நாளை (செப்.22) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனைத்தொடர்ந்து, செப்.23 முதல் 25ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
இன்று முதல் செப்.23ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதேசமயம், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.
இதையும் படிக்க : “கம்யூனிஸ்ட் தோழர்கள் பேசுவது வருத்தமளிக்கிறது!”.. சாட்டையை சுழற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.