AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வரலாற்றுப் பொக்கிஷம்.. திருப்பத்தூர் அருகே ஏரியூர் மலையில் 700 ஆண்டுகள் பழமையான அரிதான கல்வெட்டு கண்டெடுப்பு!

700-Year-Old Inscription Found: திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் மலையில் 700 ஆண்டுகள் பழமையான அரிதான கல்வெட்டு ஒன்று சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது. தெலுங்கு மன்னரான கம்பனனின் அலுவலர் முனையத்தரையர், பருஷை சபையினரின் நல்லூர் குளத்து வாய்க்காலுக்கு 'ஆயிரத்தைந்நூற்றுவன்' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க வணிகக் குழுவின் பெயரைச் சூட்டியதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது.

வரலாற்றுப் பொக்கிஷம்.. திருப்பத்தூர் அருகே ஏரியூர் மலையில் 700 ஆண்டுகள் பழமையான அரிதான கல்வெட்டு கண்டெடுப்பு!
அரிதான கல்வெட்டு
Sathis S
Sathis S | Published: 21 Sep 2026 14:51 PM IST

தமிழகத்தின் தொன்மைச் சிறப்பையும், பண்டைய மக்களின் வாழ்வியல், நீர் மேலாண்மை மற்றும் வணிக அமைப்புகளையும் வெளிக்கொணர்வதில் கல்வெட்டுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஏரியூர் மலைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான கல்வெட்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல் துறை அலுவலர் முத்துக்குமார் 19 ஆண்டுகளுக்கு முன்பாக ஏரியூர் மலையில் கண்டதாகக் கூறிய தகவலின் அடிப்படையில், சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா தலைமையிலான ஆய்வுக் குழுவினர் அங்கு நேரில் சென்று தீவிரக் கள ஆய்வு மேற்கொண்டு இக்கல்வெட்டைத் தற்போது வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர்.

கள ஆய்வும் கல்வெட்டு அமைவிடமும்:

சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா, தொல்லியல் மாணவர் கருணாகரன், சோழபுரம் பாலசுந்தரம் மற்றும் ஏரியூரைச் சேர்ந்த சஞ்சீவி நாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏரியூர் மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். உலகம்பட்டி பகுதியில் இருந்து மலைக்குச் செல்லும் பாதையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆய்வு செய்தபோது, அங்குப் பாறையில் வெட்டப்பட்டிருந்த பழமையான கல்வெட்டு அடையாளம் காணப்பட்டது. “ஸ்வஸ்தி ஸ்ரீ” என்னும் மங்களச் சொல்லோடு தொடங்கும் இக்கல்வெட்டில் மொத்தம் 8 வரிகள் இடம் பெற்றுள்ளன.

வரலாற்றுச் சான்றுகளும் கல்வெட்டுச் செய்தியும்:

இக்கல்வெட்டில் “வடுகக்கம்பனன்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது விஜயநகர ஆட்சியின் தொடக்கக் காலத்தில் தெலுங்கு மன்னரான கம்பனனைக் குறிப்பதாகக் கருத முடிகிறது. மேலும், “முனையத்தரையர்” என்பது சோழ மற்றும் பாண்டியர் காலங்களில் உயர்பதவிகளில் இருந்த அரசு அலுவலர்களைக் குறிக்கும் சொல்லாகும். இதிலிருந்து தெலுங்கு மன்னன் கம்பனனின் அலுவலரான முனையத்தரையர் என்பவரால் இக்கல்வெட்டு வெளியிடப்பட்டிருப்பது தெளிவாகிறது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் “பருஷை” என்பது ‘பரிஷத்’ எனும் சமஸ்கிருதச் சொல்லின் தமிழ்த் திரிபாகும். இதன் பொருள் பிராமணர்கள் அல்லது சான்றோர்கள் அடங்கிய ‘மதிப்பியல் முதன்மைக்குழு’ அல்லது ‘பெருமக்கள் சபை’ ஆகும். இவர்கள் கோவில்களுக்குச் சொந்தமான அறக்கட்டளைகள், நிலங்கள் மற்றும் சொத்துக்களை மேலாண்மை செய்து வந்தனர்.

வணிகக் குழுவின் பெயரில் அமைந்த வாய்க்கால்:

பருஷை சபையினரால் நிர்வகிக்கப்பட்டு வந்த நல்லூர் குளத்திற்குப் பாய்கின்ற வாய்க்காலுக்கு “ஆயிரத்தைந்நூற்றுவன்” என்று பெயர் சூட்டப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு விரிவாகப் பதிவு செய்துள்ளது. “ஆயிரத்தைந்நூற்றுவர்”, “திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்” அல்லது “நானாதேசிகள்” என்பது அக்காலத்தில் புகழ்பெற்ற பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வணிகக் குழுக்களைக் குறிக்கும் பெயர்களாகும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வணிகக் குழுவின் பெயரை ஒரு கால்வாய்க்குச் சூட்டியிருப்பது இக்கல்வெட்டின் தனிச்சிறப்பாகும். மேலும், கல்வெட்டில் ‘மலை’ என்பது ‘மாலை’ எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்றும், “மலை பருஷை நல்லூர்” என்பதே சரியான வாசிப்பாக அமைகிறது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow Us