AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“பெண் ஆட்சியருக்கே இந்த நிலையா? எம்எல்ஏ-வை உடனே கைது செய்யாதது ஏன்?”.. முதல்வர் விஜய்க்கு பெ.சண்முகம் சரமாரி கேள்வி!

P. Shanmugam Slams CM Vijay: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

“பெண் ஆட்சியருக்கே இந்த நிலையா? எம்எல்ஏ-வை உடனே கைது செய்யாதது ஏன்?”.. முதல்வர் விஜய்க்கு பெ.சண்முகம் சரமாரி கேள்வி!
பெ.சண்முகம், முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Nov 2026 08:11 AM IST

சென்னை, நவ.11: தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பெண் மாவட்ட ஆட்சியர் விவகாரம் தொடர்பாகத் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பெண் மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு நாட்கள் கடந்தும் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதும், கட்சியில் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்துத் தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க: “தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிசிடிவி பொருத்துவது கட்டாயம்!”.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பெ.சண்முகத்தின் கடுமையான கேள்வி:

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பெ.சண்முகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் தடுப்பது குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். “ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கே ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மூலமாக இத்தகைய பாலியல் தொல்லை ஏற்படுவதா? அப்படிப்பட்டவனை எதற்காக இன்னும் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற குற்றச்சாச்சுகள் எழும் போது தாமதிக்காமல் உடனடியாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் இன்றைய தேதி வரை எந்தவிதமான உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மாவட்ட ஆட்சியரின் மௌனமும் பொறுப்பும்:

பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து முறையான புகார்கள் வந்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்தான் தான் அப்படிப் பண்ணவில்லை என்று மறுத்துக் கொண்டிருக்கிறாரே தவிர, சம்பந்தப்பட்ட பெண் மாவட்ட ஆட்சித் தலைவர் தரப்பிலிருந்து இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பதை பெ.சண்முகம் சுட்டிக் காட்டினார். பாதிக்கப்பட்டவரின் பக்கம்தான் ஆட்சியாளர்கள் நின்றிருக்க வேண்டும் என்றும், ஆனால் முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்டோர் இதில் உடனடியாகத் தலையிடாமல் தாமதப்படுத்தி வருவது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் கூறினார். சில முக்கியமான மற்றும் அவசரமான பிரச்சனைகளில் அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது இறுதியில் அரசுக்கே கெட்ட பெயரைத் தேடித்தரும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதையும் படிக்க: “ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாய இடமாற்றம்!”.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..

மக்கள் அளித்த தீர்ப்பும் அரசின் கடமையும்:

தமிழக மக்கள் என்னென்ன எதிர்பார்ப்புகளோடும் நம்பிக்கையோடும் தற்போதைய ஆட்சிக்கு வாக்களித்தார்களோ, அந்த மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அரசு நடந்து கொள்ளக் கூடாது என்று பெ.சண்முகம் அறிவுறுத்தினார். இதுபோன்ற தீவிரமான குற்றச் செயல்களில் தாமதம் செய்வது மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மீதான இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Follow Us