“ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாய இடமாற்றம்!”.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..
TASMAC Orders Mandatory Transfer for Employees: ஒரே டாஸ்மாக் கடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாகப் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கட்டாயமாகப் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நவம்பர் 25-க்குள் பணியிட மாற்ற உத்தரவுகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, நவ.11: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கும், நிர்வாகப் பணிகளைச் சீரமைப்பதற்கும் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒரே டாஸ்மாக் மதுபானக் கடையில் நீண்ட காலமாகத் தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது நிர்வாகம் தற்போது அதிரவுக் பார்வையைத் திருப்பியுள்ளது. இதன் அடிப்படையில், ஒரே கடையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் அனைவரும் கட்டாயமாகப் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று டாஸ்மாக் தலைமை நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடைகளின் வகைப்பாடு, பணியாளர் மறுசீரமைப்பு:
டாஸ்மாக் கடைகளின் தினசரி சராசரி மதுபான விற்பனையின் அடிப்படையில் கடைகள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு கடைக்கும் எத்தனை பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்ற முறையான எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட உள்ளது. இதன் மூலம், குறிப்பிட்ட சில கடைகளில் அளவுக்கு அதிகமாக உள்ள ஊழியர்களைக் கண்டறிந்து, பணியாளர் பற்றாக்குறை நிலவும் மற்ற கடைகளுக்குச் சமமாகப் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இந்த இடமாற்ற நடவடிக்கையின் போது ஊழியர்களின் பணிமூப்பு (Seniority) மற்றும் அவர்கள் விரும்பும் பணியிடங்கள் தொடர்பான கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட ஒரு குறிப்பிட்ட கடையில் மட்டுமே பணிபுரிய வேண்டும் என ஊழியர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது என்றும், இறுதி முடிவை சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் எடுப்பார் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
காலக்கெடு, மேல்முறையீட்டு நடைமுறைகள்:
இந்த நிர்வாக மறுசீரமைப்புப் பணிகளை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 25ஆம் தேதிக்குள் முறையான பணியிட மாற்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்குத் டாஸ்மாக் நிர்வாகம் கடும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதோடு, இடமாற்றம் பெற்ற ஊழியர்கள் தங்களது புதிய பணியிடங்களில் பொறுப்பேற்றுக் கொண்ட விவரங்கள் குறித்து நவம்பர் 30ஆம் தேதிக்குள் தலைமை அலுவலகத்திற்கு முழுமையான அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வரும் 2028ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் முறைப்படி பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்ற உத்தரவால் பாதிக்கப்படும் ஊழியர்கள், உத்தரவு கிடைத்த 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டல முதுநிலை மேலாளரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து இழுத்த இளைஞர்.. கடலூரில் பெரும் பரபரப்பு.. 3 பேர் அதிரடி கைது!
எதிர்கால நிர்வாகச் சீர்திருத்தங்கள்:
டாஸ்மாக் கடைகளில் நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணிபுரிவதால் ஏற்படக்கூடிய நிர்வாகத் தேக்க நிலையைத் தவிர்க்கவும், முறைகேடுகளைத் தடுத்து முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் இந்த அதிரடி இடமாற்ற நடவடிக்கை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் துறையில் சீரான பணியாளர் சுழற்சியை உறுதி செய்வதன் மூலம் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், கடைகளின் செயல்பாடுகளைத் தலைமை அலுவலகத்திலிருந்து தீவிரமாகக் கண்காணிக்கவும் இந்த முறையான வழிகாட்டுதல்கள் உறுதுணையாக அமையும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.