டெல்லி அக்ஷர்தாம் கோயிலில் அன்னக்கூட் திருவிழா.. 1,256 வகையான சைவ உணவுகள் படைத்து கோவர்த்தன பூஜை!
அன்னக்கூட் என்பதற்கு 'உணவுகளின் மலை' என்று பொருள். இறைவன் வழங்கிய உணவு, செல்வம் உள்ளிட்ட வளங்களுக்காக நன்றி தெரிவிக்கும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. வடமேற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இந்நாளில் புத்தாண்டும் தொடங்குகிறது. விழா காலை 11 மணிக்கு வேத முறைப்படி ஷோடசோபசார பூஜையுடன் தொடங்கியது.
நவம்பர் 10, 2026: புதுடெல்லியில் உள்ள புகழ்பெற்ற சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலில் கோவர்த்தன பூஜை மற்றும் அன்னக்கூட் திருவிழா செவ்வாய்க்கிழமை பக்தி, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இறைவனுக்கு 1,256 வகையான சுத்தமான சைவ உணவுகள் படைக்கப்பட்டன.
அன்னக்கூட் என்பதற்கு ‘உணவுகளின் மலை’ என்று பொருள். இறைவன் வழங்கிய உணவு, செல்வம் உள்ளிட்ட வளங்களுக்காக நன்றி தெரிவிக்கும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. வடமேற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இந்நாளில் புத்தாண்டும் தொடங்குகிறது.
1,256 வகையான உணவுகள் படையல்
விழா காலை 11 மணிக்கு வேத முறைப்படி ஷோடசோபசார பூஜையுடன் தொடங்கியது. கோயில் வளாகத்தில் கோவர்த்தன மலையின் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டு, அதில் மலையின் பாறைகள் மற்றும் மண்ணும் இடம்பெற்றிருந்தன. பூஜை நிறைவடைந்ததும் மதியம் 12 மணிக்கு பக்தர்கள் அன்னக்கூட் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
நெய் இனிப்புகள், லட்டு, பேடா, அல்வா உள்ளிட்ட பாரம்பரிய இனிப்பு வகைகள், கார உணவுகள், பல்வேறு காய்கறி உணவுகள், பருப்பு, சாத வகைகள், பழங்கள், பானங்கள் மற்றும் பேக்கரி உணவுகள் என 1,256 வகையான உணவுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு இறைவனுக்குப் படைக்கப்பட்டன.
1,800-க்கும் மேற்பட்ட கோயில்களில் கொண்டாட்டம்!
இதுகுறித்து டெல்லி அக்ஷர்தாம் கோயிலின் தலைமை நிர்வாகத் துறவி முனிவத்சல் தாஸ் சுவாமி கூறுகையில், சுவாமிநாராயணரின் காலம் முதல் பின்பற்றப்படும் ஆன்மிகப் பாரம்பரியத்தின்படி, BAPS சுவாமிநாராயண் அமைப்பு உலகம் முழுவதும் உள்ள 1,800-க்கும் மேற்பட்ட கோயில்களில் அன்னக்கூட் திருவிழாவைக் கொண்டாடி வருவதாகத் தெரிவித்தார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் சேவையும் பக்தர்களின் ஒற்றுமையும் இவ்விழாவின் சிறப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
மகந்த் சுவாமி மகாராஜ் தனது வாழ்த்துச் செய்தியில் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, அனைவரும் உடல், மனம், செல்வம் ஆகியவற்றில் நலமுடன் வாழ ஆசி வழங்கினார். விழாவையொட்டி கோயில் வளாகம் வண்ணமயமான ரங்கோலிகள், தீபங்கள் மற்றும் மலர் அலங்காரங்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அன்னக்கூட் தரிசனம் செய்தனர்.