புதிய கொரோனா திரிபு PJ.2.1 கண்டுபிடிப்பு.. சளி, காய்ச்சல், தொண்டை வலி அறிகுறிகளா? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
தற்போதைய ஆய்வுகளின்படி, PJ.2.1 திரிபு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தவிர்க்கும் திறனில் மற்ற திரிபுகளைவிட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. மேலும், தீவிர பாதிப்பு, மருத்துவமனை அனுமதி மற்றும் உயிரிழப்புகளை அதிகரிக்கிறது என்பதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லை. முதியவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
நவம்பர் 10, 2026: உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய திரிபான PJ.2.1 கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் திரிபு எவ்வாறு பரவுகிறது, என்னென்ன அறிகுறிகளை ஏற்படுத்துகிறது, முந்தைய கொரோனா திரிபுகளைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) விளக்கம் அளித்துள்ளது.
புதிய திரிபால் ஏற்படும் அறிகுறிகள் சாதாரண சளி அல்லது பருவகால காய்ச்சலைப் போலவே இருக்கலாம் என்றும், பரிசோதனை செய்யாமல் தொற்றை உறுதிப்படுத்துவது கடினம் என்றும் தெரிவித்துள்ளது.
PJ.2.1 திரிபு என்றால் என்ன?
PJ.2.1 என்பது கொரோனா தொற்றை ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் புதிய மரபணு வழித்தோன்றலாகும். 2026 அக்டோபரில் வெளியான ஆய்வுக்கு முந்தைய அறிக்கையின்படி, இதன் முதல் மாதிரி மே 2-ஆம் தேதி கனடாவின் ஒன்டாரியோவில் கண்டறியப்பட்டது. பின்னர் அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வக முடிவுகளின்படி, மனித உடல் செல்களில் உள்ள ACE2 ஏற்பிகளுடன் இந்த வைரஸ் அதிக திறனுடன் இணையும் தன்மையைக் கொண்டிருக்கலாம். இது அதன் பரவலுக்கு உதவக்கூடும் எனக் கருதப்படுகிறது.
மேலும் படிக்க: வெள்ளத்தில் சிக்கிய சிம்பன்சி குரங்குகள்.. ட்ரோன் மூலம் உணவு வழங்கிய ஊழியர்கள்.. வைரல் வீடியோ!
என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?
PJ.2.1 திரிபால் ஏற்படக்கூடிய பொதுவான அறிகுறிகள்:
- காய்ச்சல், தொடர் இருமல்
- தொண்டை வலி
- மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு
- தலைவலி, உடல் வலி
- அதிகப்படியான சோர்வு
- வாசனை, சுவை உணரும் திறனில் மாற்றம்
- செரிமானப் பிரச்சினைகள், மூச்சுத்திணறல்
இந்த அறிகுறிகள் சாதாரண சளி, காய்ச்சல் மற்றும் பிற சுவாசத் தொற்றுகளிலும் ஏற்படலாம். எனவே, அறிகுறிகளை மட்டும் வைத்து எந்த வைரஸ் பாதிப்பு என்பதை உறுதிப்படுத்த முடியாது என WHO தெரிவித்துள்ளது. மருத்துவப் பரிசோதனை அவசியமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க: ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா தயார்! அதிபர் ஜெலென்ஸ்கி உடன் பேசிய பிரதமர் மோடி..
முந்தைய திரிபுகளைவிட ஆபத்தானதா?
தற்போதைய ஆய்வுகளின்படி, PJ.2.1 திரிபு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தவிர்க்கும் திறனில் மற்ற திரிபுகளைவிட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. மேலும், தீவிர பாதிப்பு, மருத்துவமனை அனுமதி மற்றும் உயிரிழப்புகளை அதிகரிக்கிறது என்பதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லை. முதியவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
தற்காத்துக் கொள்வது எப்படி?
கைகளை அடிக்கடி கழுவுதல், போதிய காற்றோட்டத்தை உறுதி செய்தல், உடல்நிலை சரியில்லாதவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிதல் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.