AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்.. ஜப்பானிலும் அதிர்ந்த பூமி.. விவரம் இதோ!

Earthquake News : நவம்பர் 8ம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், கடைகளின் ஜன்னல்களை நொறுக்கியது, மக்களைக் கட்டிடங்களை விட்டு வெளியேறச் செய்தது, மேலும் குறைந்தது 22 பேர் காயமடைந்தனர். மேலும் விவரங்களை பார்க்கலாம்

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்.. ஜப்பானிலும் அதிர்ந்த பூமி.. விவரம் இதோ!
நிலநடுக்கம்
C Murugadoss
C Murugadoss | Updated On: 08 Nov 2026 08:06 AM IST

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவை 5.7 என மதிப்பிட்டுள்ளது, அதேசமயம் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதை 5.5 எனக் குறிப்பிட்டுள்ளது. சில லேசான பின் அதிர்வுகளும் உணரப்பட்டன. அதேநேரம், தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின்படி, ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் இன்று காலை 05:23 மணிக்கு (இந்திய நேரப்படி) ரிக்டர் அளவுகோலில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானின் மத்திய பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், அடுத்த சில நாட்களுக்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள ஷிசுவோகா மாகாணத்தில், இன்று அதிகாலை 1.04 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதன் தீவிரத்தை 5.5 எனப் பதிவு செய்துள்ளது.

கடைகளின் கண்ணாடி உடைந்தது

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஐச்சி மாகாணத்தில் அதிகமாக உணரப்பட்டுள்ளது. மேலும், ஹமாமட்சு, கியோட்டோ, நாரா, யமனாஷி மற்றும் கிஃபு உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல்வேறு கடைகளின் கண்ணாடிகள் உடைந்து சாலைகளில் சிதறிக் கிடந்தன. புத்தகக் கடை ஒன்றில் அலமாரிகளில் இருந்த புத்தகங்கள் அனைத்தும் கீழே விழுந்து சிதறிக் கிடந்தன.

மேலும், நிலநடுக்கத்தை உணர்ந்து கட்டடங்களில் இருந்து அவசரமாக வெளியேற முயன்றபோது, படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்தும் பலர் காயமடைந்துள்ளனர். இதுவரை குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்த ஒரு வாரத்திற்கு, குறிப்பாக அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு, வலுவான நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை

மேலும், கனமழை பெய்யும் பட்சத்தில் நிலச்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் முக்கிய விரைவு ரயில் சேவையான ஷின்கான்சென் ரயில்கள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில், மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நங்காய் ட்ரஃப் பகுதியில் தற்போது குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் ஏற்கனவே நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த அடுத்தடுத்த நில அதிர்வு எச்சரிக்கைகள் அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us