டெல்லி எனக் கூறி வங்கதேசத்தின் ஏழைப் பகுதிகளைப் படம்பிடிக்கும் சீனர்கள்.. இந்தியாவுக்கு எதிராகப் போலி பிரச்சாரமா? வெளியுறவு அமைச்சகம் கண்டனம்!
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நாட்டைப் பற்றித் திரித்துக் காட்டும் இத்தகைய முயற்சிகள் வருத்தமளிக்கின்றன. டாக்காவின் சில பகுதிகளை டெல்லி எனச் சித்தரிப்பது போன்ற வெளிநாட்டுத் தரப்பினரின் முயற்சிகள், இதன் பின்னணியில் இருப்பவர்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
நவம்பர் 10, 2026: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஏழ்மையான குடியிருப்புப் பகுதிகளை இந்தியாவின் தலைநகர் டெல்லி எனக் கூறி, சீன யூடியூபர்கள் மற்றும் சமூக வலைதள நேரலைப் பதிவர்கள் வீடியோ வெளியிட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்தியாவின் வாழ்க்கை முறை, சுகாதாரம், உணவுப் பழக்கம் மற்றும் வறுமை குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டாக்காவின் டெக்பாரா மற்றும் உத்தரா பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சீனர்கள் வீடியோ பதிவு மற்றும் நேரலை ஒளிபரப்பில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக அதிகாலை முதல் இரவு வரை இத்தகைய நடவடிக்கைகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
டெல்லி எனக் கூறி அவதூறு வீடியோக்கள்!
குறிப்பாக, சீனாவைச் சேர்ந்த ‘மியான்மியான்’ என்ற பெண், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள 12-வது செக்டாரில் கால்வாய் அருகே நின்று நேரலை செய்துள்ளார். அப்போது அந்தப் பகுதியை டெல்லி என அறிமுகப்படுத்திய அவர், அங்குள்ள வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்கள் அசுத்தமாகவும், வளர்ச்சியடையாமலும் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதேபோல், டாக்காவின் டெக்பாரா பகுதியில் தேநீர்க் கடையில் இருந்து நேரலை செய்த மற்றொரு சீனர், அங்கு வழங்கப்படும் தேநீர் மாட்டு சிறுநீரில் தயாரிக்கப்படுவதாகக் கூறி அவதூறு பரப்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, சுகாதாரம் மற்றும் உணவுப் பழக்கங்கள் குறித்தும் இழிவான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பல மாதங்களாகத் தொடரும் நடவடிக்கை
கடந்த மே 2026 முதல் டாக்காவின் ஏழ்மையான பகுதிகளில் சீன சமூக வலைதளப் பதிவர்கள் வீடியோ எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு உதவியாகச் செயல்பட்ட ரிது அக்தர் என்ற வங்கதேசப் பெண், நாளொன்றுக்கு 700 முதல் 800 டாக்கா வரை ஊதியம் பெற்றதாகக் கூறியுள்ளார். இதேபோல், மேலும் சில பெண்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: நாடு முழுவதும் புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடி குறைப்பு! 137 மருந்துகளுக்கு 96.45% வரை விலை குறைவு..
சீனாவின் குறுகிய காணொளித் தளமான டூயின் (Douyin), தகவல் தொடர்புத் தளமான வீசாட் (WeChat) ஆகியவற்றில் இந்த நேரலைக் காட்சிகள் ஒளிபரப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் பார்வையாளர்களை ஈர்ப்பது, பொருட்களை விளம்பரப்படுத்துவது உள்ளிட்ட வணிக நோக்கங்களும் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டைப் பற்றித் திரித்துக் காட்டும் இத்தகைய முயற்சிகள் வருத்தமளிக்கின்றன. டாக்காவின் சில பகுதிகளை டெல்லி எனச் சித்தரிப்பது போன்ற வெளிநாட்டுத் தரப்பினரின் முயற்சிகள், இதன் பின்னணியில் இருப்பவர்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
மற்றொரு நாட்டின் பகுதிகளை இந்தியாவாகச் சித்தரித்து, தவறான தகவல்களையும் அவதூறான கருத்துகளையும் பரப்புவது சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.