AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரே மதிப்பெண்கள்… வெவ்வேறு எதிர்காலம்! உயர்கல்வியில் மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வா?

இந்தியாவில் கல்வி என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதே அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம். ஆனால், ஒரே மதிப்பெண் பெறும் இரண்டு மாணவிகளுக்கு, அவர்கள் பிறந்த மாநிலத்தைப் பொறுத்து உயர்கல்விக்கான வாய்ப்புகள் முற்றிலும் மாறுபடுகின்றன என்றால் நம்ப முடிகிறதா? இந்தியாவின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் வெளியிடும் புள்ளிவிவரங்கள் இதைத்தான் உணர்த்துகின்றன.

ஒரே மதிப்பெண்கள்…  வெவ்வேறு எதிர்காலம்! உயர்கல்வியில் மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வா?
பள்ளிImage Source: PTI
Santosh Nair
Santosh Nair | Published: 09 Nov 2026 09:49 AM IST

பீகாரில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் மீனா என்ற மாணவியும், சண்டிகரில் நேஹா என்ற மாணவியும் பிறந்ததாகக் கற்பனை செய்து கொள்வோம். இருவரும் ஒரே வாரத்தில் பிறந்தவர்கள். படிப்பிலும் கணிதத்திலும் சமமான திறமை கொண்டவர்கள். 18 வயதில் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது இருவரும் ஒரே மதிப்பெண்களைப் பெறுகின்றனர். ஆனால், அதன்பிறகு அவர்களின் கல்விப் பயணம் ஒரே மாதிரியாக அமையவில்லை.

நேஹாவின் தாயார், வீட்டிலிருந்து ஒரு மணி நேரப் பேருந்து பயணத்தில் செல்லக்கூடிய கல்லூரிகளின் பட்டியலைத் தயாரிக்கிறார். ஆனால் மீனாவின் தந்தை விசாரித்துப் பார்க்கும்போது, அவர்களது மாவட்டத்தில் ஒரு சில படிப்புகளைக் கொண்ட ஒரே கல்லூரி மட்டுமே இருப்பது தெரிய வருகிறது. மற்றொரு கல்லூரிக்குச் செல்ல வேண்டுமானால் இரவு முழுவதும் ரயிலில் பயணம் செய்ய வேண்டும். விடுதியில் தங்க வேண்டும். அதற்கான செலவுகளையும் குடும்பம் ஏற்க வேண்டும்.

மகளின் படிப்புக்கு எதிரானவர் அல்ல மீனாவின் தந்தை. ஆனால் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், பயணச் செலவு, மகள் வெளியூரில் தனியாகத் தங்குவது போன்ற பல விஷயங்கள் அவருக்குத் தயக்கத்தை ஏற்படுத்துகின்றன. இங்கே பிரச்சினை மாணவிகளின் திறமையோ, மதிப்பெண்களோ அல்ல. அவர்கள் பிறந்த மாநிலம்தான் அவர்களின் கல்வி வாய்ப்புகளைத் தீர்மானிக்கிறது.

இந்தியாவில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் என்ன சொல்கிறது?

மத்திய கல்வி அமைச்சகத்தின் அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையான AISHE 2021-22 அறிக்கையின்படி, இந்தியாவின் உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio – GER) 28.4 சதவீதமாக உள்ளது.

அதாவது, கல்லூரி வயதில் உள்ள இளைஞர்களில் சுமார் 10 பேரில் 3 பேர் மட்டுமே கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது டிப்ளமோ படிப்புகளில் சேருகின்றனர். மீதமுள்ள 7 பேருக்கு உயர்கல்வி கிடைப்பதில்லை.

இதில் ஒரு முக்கியமான மாற்றமும் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் உயர்கல்வியில் ஆண்களைவிட பெண்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போதைய புள்ளிவிவரத்தில் பெண்களின் சேர்க்கை விகிதம் 28.5 சதவீதமாகவும், ஆண்களின் சேர்க்கை விகிதம் 28.3 சதவீதமாகவும் உள்ளது. அதாவது, உயர்கல்வி சேர்க்கையில் பெண்கள் ஆண்களைவிடச் சற்றே முன்னிலையில் உள்ளனர்.

அதேபோல், பட்டியலின மாணவர்களின் சேர்க்கை விகிதம் 25.9 சதவீதமாகவும், பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை விகிதம் 21.2 சதவீதமாகவும் உள்ளது. இவை தேசிய சராசரியைவிடக் குறைவாக இருந்தாலும், கல்வி உதவித்தொகை மற்றும் இடஒதுக்கீடு போன்ற திட்டங்கள் மூலம் உயர்கல்வியில் இவர்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது.

சண்டிகர் 64.8%… பீகார் வெறும் 17.1%

இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையிலான உயர்கல்வி சேர்க்கை விகிதத்தைப் பார்க்கும்போதுதான் மிகப்பெரிய வேறுபாடு வெளிப்படுகிறது.

AISHE அறிக்கையின்படி:

– சண்டிகர் – 64.8%
– புதுச்சேரி – 61.5%
– டெல்லி – 49.0%
– உத்தரப் பிரதேசம் – 24.1%
– ஜார்க்கண்ட் – 18.6%
– பீகார் – 17.1%
இந்தப் புள்ளிவிவரங்களின்படி, சண்டிகரின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் பீகாரைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. ஒருபுறம் சண்டிகர் மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளில் உயர்கல்விக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. மறுபுறம் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் உயர்கல்வியை அடைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.

இதனால் மாணவர்களின் தனிப்பட்ட திறமையைவிட அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் கல்வி உள்கட்டமைப்பே முக்கியமானதாக மாறுகிறது.

இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம்?

மாநிலங்களுக்கு இடையே உயர்கல்வி சேர்க்கையில் இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கல்லூரிகளின் எண்ணிக்கை மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள். ஒரு மாணவரின் வீட்டிற்கு அருகிலேயே பல கல்லூரிகள் இருந்தால், பேருந்தில் பயணம் செய்து குறைந்த செலவில் உயர்கல்வியைத் தொடர முடியும். ஆனால் ஒரு மாவட்டத்தில் சில கல்லூரிகள் மட்டுமே இருந்தால், மாணவர்கள் தொலைதூர இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இரண்டாவதாக, பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை. பல மாணவர்கள் 8 அல்லது 10ஆம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டால், உயர்கல்வியை நோக்கிச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. பள்ளிப்படிப்பை அதிகமானோர் நிறைவு செய்யும் மாநிலங்களில் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

மூன்றாவதாக, குடும்பத்தின் பொருளாதார நிலை. குடும்பத்தில் கூடுதலாக ஒரு சம்பாதிக்கும் நபர் தேவைப்படும் சூழலில், இளம் வயதிலேயே மாணவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் உயர்கல்வி அவர்களுக்கான முதல் வாய்ப்பாக இல்லாமல், கைவிடப்படும் வாய்ப்பாக மாறுகிறது.

மேலும், ஒரு மாநிலத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அடுத்த தலைமுறைக்குக் கல்வி கற்பிக்கத் தேவையான ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற உள்ளூர் நிபுணர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்படலாம். இதனால் கல்வியில் நிலவும் இடைவெளி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடரும் அபாயம் உள்ளது.

புள்ளிவிவரங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்

இந்த அறிக்கையில் ஒரு முக்கியமான அம்சத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு மாணவர் அவர் படிக்கும் மாநிலத்தின் கணக்கில்தான் சேர்க்கப்படுகிறார்; அவர் பிறந்த அல்லது வளர்ந்த மாநிலத்தின் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. உதாரணமாக, சண்டிகர் மற்றும் டெல்லி போன்ற பகுதிகளுக்கு உயர்கல்விக்காக மற்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வருகின்றனர். எனவே, அங்கு காணப்படும் அதிக சேர்க்கை விகிதம் என்பது அந்தப் பகுதிகளில் பிறந்த மாணவர்களின் எண்ணிக்கையை மட்டும் பிரதிபலிப்பதில்லை. வெளிமாநிலங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களும் இதில் அடங்குகின்றனர்.

எனவே, இந்தப் புள்ளிவிவரங்களை வைத்து அந்த மாநிலங்களில் பிறந்த ஒவ்வொரு மாணவருக்கும் இதே அளவிலான வாய்ப்பு கிடைக்கிறது என்று கூற முடியாது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையே உயர்கல்வி வாய்ப்புகளில் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.

முடிவில்… பிறந்த இடம் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டுமா?

மீனா இறுதியில் இரவு ரயிலில் பயணம் செய்து உயர்கல்வியைத் தொடர முடிவு செய்கிறாள். ஆனால் நேஹாவுக்கு அத்தகைய சிரமம் இல்லை. இருவரும் ஒரே மதிப்பெண் பெற்றவர்கள். ஒரே திறமை கொண்டவர்கள். ஆனால் அவர்களின் கல்விப் பயணம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.இந்த இரண்டு மாணவிகளும் கற்பனையானவர்கள். ஆனால் அவர்களின் பின்னணியில் உள்ள புள்ளிவிவரங்கள் உண்மையானவை. இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவத்தை உறுதி செய்கிறது. அந்தச் சமத்துவம் ஒரு மாநிலத்தின் எல்லையோடு முடிந்துவிடக் கூடாது. எந்த மாநிலத்தில் பிறந்திருந்தாலும், ஒவ்வொரு மாணவருக்கும் தரமான உயர்கல்வியைப் பெறுவதற்கான சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

ஒரு மாணவியின் திறமையை அவரது மதிப்பெண்கள் தீர்மானிக்கலாம். ஆனால் அந்தத் திறமைக்கான வாய்ப்பை அவர் பிறந்த மாநிலம் தீர்மானிக்க வேண்டுமா?

Follow Us