மகா கந்த சஷ்டி விரதம் 2026: துவங்கும் நாள், நேரம் மற்றும் கடைப்பிடிக்கும் முறைகள்!
Kandha Sashti Fasting 2026 : முருகப்பெருமானின் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மகா கந்த சஷ்டி விரதம், 2026 ஆம் ஆண்டுக்கான தனது முக்கியத்துவம் மற்றும் கடைப்பிடிக்கும் முறைகள் குறித்து ஆத்ம ஞான மையம் மூலம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் அனுசரிக்கப்படும் இந்த விரதம், இகலோக மற்றும் பரலோக நலன்களை அருளும் ஆற்றல் கொண்டது.
கந்த சஷ்டி விரதத்தின் முக்கிய நோக்கம் குழந்தை பாக்கியம். “சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் குழந்தை வரும்” என்ற பழமொழி, குழந்தை வரம் வேண்டி நிற்கும் தம்பதிகளுக்கு இந்த விரதத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது. இது தவிர, தொழில் முன்னேற்றம், செல்வ செழிப்பு, வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி பெறுதல், மகிழ்ச்சியான வாழ்வு பெறுதல் போன்ற பல்வேறு வேண்டுதல்களுக்கும் இந்த விரதம் பலன் அளிக்கிறது. வள்ளல் வாரியார் சுவாமிகள் கூற்றுப்படி, முருகப்பெருமான் ஆறு நாட்கள் அசுரர்களுடன் போரிட்டு தாரகன், சிங்கமுகன், சூரபதுமன் உள்ளிட்ட அசுரர்களை சம்ஹாரம் செய்தார். ஏழாம் நாள், தன்னிடமிருந்து விலகிய இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய சக்திகளை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொண்டு சுப்பிரமணியராகக் காட்சி அளித்தார். நாமும் நமது வேண்டுதல்களை இந்த மூன்று சக்திகளும் ஒருங்கிணைந்த முருகப்பெருமானிடம் சமர்ப்பிக்கும்போது, அடுத்த சஷ்டிக்குள் அது நிறைவேறும் என்பதே ஏழு நாட்கள் விரதம் இருப்பதன் தத்துவமாகும்.
2026 ஆம் ஆண்டுக்கான முக்கிய நாட்கள்
- பிரதமை துவங்கும் நாள்: 09-11-2026 பிற்பகல் 12:47 மணி
- பிரதமை நிறைவடையும் நாள்: 10-11-2026 பிற்பகல் 02:02 மணி
- கந்த சஷ்டி துவங்கும் நாள்:10-11-2026 (முருகனுக்கு உகந்த பிரதமை திதியன்று காலை விரதத்தைத் தொடங்கலாம்)
- சூரசம்ஹாரம் நடைபெறும் நாள்:15-11-2026
- மகா கந்த சஷ்டி விரதம் நிறைவுறும் நாள்:16-11-2026 (திருக்கல்யாணம் நடைபெறும் நாள்)
கந்த சஷ்டி விரதத்தை அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலைக்கு ஏற்ப மூன்று வகைகளில் கடைப்பிடிக்கலாம்:
1. பட்டினியே இல்லாத விரதம்: சைவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு, தினமும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது, அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்பது, அன்னதானம் செய்வது.
2. மிதமான விரதம்: ஒரு வேளை உணவு (சைவ உணவு) எடுத்துக்கொண்டு மற்ற வேளைகளில் பட்டினியாக இருப்பது. மருந்து உட்கொள்பவர்கள், சிகிச்சை பெறுபவர்கள், குறிப்பாக குழந்தை பாக்கியத்திற்காக விரதமிருப்போர் இம்முறையைப் பின்பற்றலாம். பழச்சாறுகள், இளநீர், பால், பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு விரதம் இருப்பது இந்த வகையைச் சாரும்.
Also Read: சூரனை வென்ற சரித்திரம் முதல் ஆறு நாள் விரதம் வரை… கந்த சஷ்டியின் மகத்துவம் தெரியுமா?
கடுமையான விரதம்:
- மிளகு விரதம்: முதல் நாளில் ஒரு மிளகுடன் தொடங்கி, சூரசம்ஹாரம் வரை தினமும் ஒரு மிளகை அதிகரித்து (அதிகபட்சம் ஆறு மிளகு), ஒரு டம்ளர் தண்ணீருடன் எடுத்துக்கொள்வது. மற்ற எந்த உணவும் உண்ணாமல் இருப்பது. இது மிகவும் கடினமான விரதம்.
- பழச்சாறு விரதம்: காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் பழச்சாறுகள் மட்டுமே எடுத்துக்கொள்வது.
- இளநீர் விரதம்: இளநீர் மற்றும் அதன் வழுக்கையை மட்டும் உணவாகக் கொள்வது.
பால்/பழ விரதம்: பால் அல்லது பழங்களை மட்டுமே உணவாகக் கொள்வது. - பிரசாத விரதம்: கோயில்களில் வழங்கப்படும் பால், சர்க்கரைப் பொங்கல், புளி சாதம் போன்ற நெய்வேத்தியப் பொருட்களை மட்டுமே எடுத்துக்கொள்வது
- உப்பில்லாத உணவு: உப்பு சேர்க்காத பால் சாதம், தயிர் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றை மதிய வேளையில் மட்டும் சுவாமிக்கு நிவேதனம் செய்து உண்பது.
விரத காலத்தில் கவனிக்க வேண்டியவை
- தூக்கம்: இரவில் கட்டாயம் உறங்க வேண்டும். பகலில் உறங்குவதைத் தவிர்ப்பது சிறப்பு.
- மாதவிடாய்: மாதவிடாய் காலத்திலும் விரதத்தைத் தொடரலாம். பூஜை அறைக்கும் கோயிலுக்கும் செல்லாமல், வெளியிலிருந்து இறைவனை வணங்கலாம்.
- காலணி: சபரிமலை விரதம் போல கண்டிப்பு தேவையில்லை. அலுவலகம் அல்லது அத்தியாவசியத் தேவைகளுக்கு காலணி பயன்படுத்தலாம்.
- படுக்கை: காப்பு கட்டி விரதமிருந்தால் தரையில் படுக்க வேண்டும். உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள், விரதத்திற்காகப் புதிதாக ஒரு மெத்தையைப் பயன்படுத்திப் படுக்கலாம்.
- பிரசாதம்: கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களை சாப்பிடலாம்.
- தீட்டு:ரத்த சம்பந்தமான உறவுகளுக்குத் தீட்டு ஏற்பட்டால், 16 நாட்களுக்குள் காரியங்கள் முடிந்திருந்தால் விரதத்தை மேற்கொள்ளலாம். அவரவர் குடும்ப வழக்கப்படி பெரியவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம்.
- காப்பு/மாலை: காப்பு கட்டியோ, மாலை அணிந்தோதான் விரதமிருக்க வேண்டும் என்பதில்லை. அவரவர் வாழ்க்கை முறைக்கு ஏற்ப விரதத்தை மேற்கொள்ளலாம்.