திமுக கூடாரமாகும் தவெக.. முதல்வர் விஜய்க்கு வீடியோ வெளியிட்டு தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி.. தூத்துக்குடியில் பகீர் சம்பவம்!
TVK Functionary Attempt Self Harm : தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவர் முதல் அமைச்ச ர் ஜோசப் விஜய்க்கு விஷம் அருந்தியதை வீடியோவாக வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
தூத்துக்குடி மாவட்டம் புறநகர் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்து வருபவர் மதன் ராஜா. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகளை பொறுப்பில் இருந்து நீக்கினார். இவர்களுக்கு பதிலாக, அவரது ஆதரவாளர் மற்றும் உறவினர்களை அந்த பொறுப்புகளில் நியமித்ததாக கூறப்படுகிறது. இதே போல, தூத்துக்குடி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்த குழந்தை ராஜா என்பவரையும் அந்த பொறுப்பில் இருந்து, அமைச்சர் மதன் ராஜா நீக்கியதுடன், தனது உறவினரான திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த பாரத் என்பவரை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்து புதிய ஒன்றிய செயலாளராக அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு, குழந்தை ராஜாவின் ஆதரவாளரும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளருமான முத்துக்குமரன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
விஷம் அருந்துவதை வீடியோவாக வெளியீடு
இந்த நிலையில், முத்துக்குமரன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய்க்கு, கடந்த 2000- ஆம் ஆண்டில் இருந்து 26 ஆண்டுகளாக உங்களது தீவிர ரசிகனாக பயணித்து வருகிறேன். நீங்கள் தான் எனது உலகம், எனது உயிர் என்று வாழ்ந்து வருகிறேன். நீங்கள் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய போது தீவிரமாக கட்சி பணியாற்றி வந்தேன். தற்போது, நீங்கள் முதல்வராக பொறுப்பேற்று இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் படிக்க: ஜெம் கிராணைட் வீரமணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை… திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்




முதல் அமைச்சர் விஜய் பெயருக்கு களங்கம்
ஆனால், தூத்துக்குடி புறநகர் மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடக்கும் குளறுபடிகளால் உங்களது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உங்களுக்கு இமெயில் அனுப்பி உள்ளேன். நேரில் பேச முயற்சித்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுகவில் இருந்து புதிதாக வந்தவர்களுக்கு நமது கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், தமிழக வெற்றி கழகம், திமுக கூடாரமாக மாறி வருகிறது.
திமுக கூடாரமாக மாறி வரும் தமிழக வெற்றிக் கழகம்
இதற்கு ஏற்றவாறு உங்களது பெயரை கெடுக்கும் வகையில் இங்குள்ள நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர் என்று மனவேதனையுடன் பேசியவாறே விஷம் அருந்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவி வருகிறது. இது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது, அந்த நபர் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: மதுரைக்கு மாறிய ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்ட தொடக்க விழா – என்ன காரணம்?