கொட்டித்தீர்க்கும் கனமழை.. இடுக்கியில் வீட்டை பலிகொண்ட நிலச்சரிவு.. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 5 குடும்பங்கள்!!
Kerala Heavy Rain: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியில் பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பழம்பள்ளிச்சல் பகுதியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமான நிலையில், முன்னெச்சரிக்கையாக வேறு இடத்திற்கு மாறியதால் 5 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மலை மாவட்டங்களான இடுக்கி, மலப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாகப் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும், தொடர் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் கடும் பீதியுடன் வசித்து வரும் நிலையில், அடிமாலி அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் வீடு ஒன்று முற்றிலுமாக இடிந்து நாசமானது. எனினும், உரிய நேரத்தில் மக்கள் சுதாரித்து வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அடிமாலியில் பயங்கர நிலச்சரிவு – ஒரு வீடு தரைமட்டம்:
இடுக்கி மாவட்டம் மூணார்-வட்டவடா பாதையில் ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், அடிமாலி அருகேயுள்ள பழம்பள்ளிச்சல் (Pazhampallichal) பகுதியில் திங்கள்கிழமை மீண்டும் ஒரு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து வந்த பெரும் பாறைகளும், சேறும் சகதியும் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி சீறிப்பாய்ந்தன. இந்த அசாத்திய வேகத்தில் வந்த நிலச்சரிவில் சிக்கி, அப்பகுதியில் இருந்த ஒரு குடியிருப்பு வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. நிலச்சரிவு ஏற்பட்ட காட்சி மற்றும் வீட்டின் அழிவு தொடர்பான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
