“தமிழக நலனா? அரசியலா?”.. எம்பிக்கள் கூட்டத்தைப் புறக்கணிக்கும் கட்சிகளை சாடிய மாணிக்கம் தாகூர்!!
TN Congress Chief Manickam Tagore Slams: முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP-க்கள்) கூட்டத்தைப் புறக்கணிக்கும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "இது கட்சி அரசியல் அல்ல; தமிழ்நாட்டின் எதிர்காலம் பற்றிய கூட்டம்" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 08: தமிழக உரிமைகள் மற்றும் முக்கிய மாநிலப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காகத் தமிழக அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP-க்கள்) கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக, அதிமுக, பாமக, தேமுதிக மற்றும் மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. கூட்டத்தைப் புறக்கணிக்கும் கட்சிகளைக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதையும் படிக்க: பழனி கோவில் நில மோசடி வழக்கு.. சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் திடீர் உயிரிழப்பு.. மதுரையில் பரபரப்பு!
தமிழக உரிமைகள் சார்ந்த கூட்டம்:
இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவிக்கையில், “இக்கூட்டம் வெறும் அரசியல் சார்ந்த ஆலோசனைக் கூட்டம் அல்ல; தமிழ்நாட்டின் உரிமை, நலன் மற்றும் எதிர்காலத் தேவைகளை மையமாகக் கொண்டு முதலமைச்சர் விஜய்யால் கூட்டப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய சூழலில், பிரதான கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக இதைப் புறக்கணிப்பது ஏமாற்றமளிப்பதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மாநில எதிர்காலம் பற்றிய கூட்டம்:
கூட்டத்தைப் புறக்கணிக்கும் கட்சிகளை நேரடியாகச் சாடிய அவர், தமிழ்நாட்டின் நலனை விடத் தங்களின் சுய அரசியல் லாபத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்கள் மட்டுமே முதலமைச்சர் அழைப்பு விடுத்த இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு முதலிடம் கொடுத்து, அரசியலுக்கு இரண்டாம் இடம் கொடுப்பவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கூட்டப்பட்ட இந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கண்டிப்பாகக் கலந்து கொள்வார்கள்.
மக்கள் மனதில் நினைவில் கொள்வார்கள்:
இது எந்தவொரு தனிப்பட்டக் கட்சி அரசியல் சம்பந்தப்பட்ட கூட்டம் கிடையாது. இது தமிழ்நாட்டின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் பற்றிய மிக முக்கியமான கூட்டம். தமிழக மக்கள் இந்த நிகழ்வுகளை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆபத்தான மற்றும் தேவைப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டின் பக்கம் உறுதியாக நிற்பவர்கள் யார் என்பதை மக்கள் வரும் காலத்தில் கண்டிப்பாக நினைவில் கொள்வார்கள்.
இதையும் படிக்க: விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
முதலமைச்சர் விஜய் கூட்டிய முதல் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை திமுக, அதிமுக போன்ற முன்னணி அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இக்கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, புறக்கணிக்கும் கட்சிகளைக் கடுமையாகச் சாடியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.