விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
Premalatha Vijayakanth : விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தேமுதிக பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறிய கருத்துக்களை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரந்து கொள்ளலாம்.
தமிழக அரசு தாக்கல் செய்த பொது நிதிநிலை அறிக்கை மற்றும் விவசாய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. பேசியதாவது: தமிழக சட்டமன்றம் கூடிய முதல் நாளிலிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். இதற்கு தனியாக பட்ஜெட் ஒதுக்கினால்தான் தனி மாவட்டமாக அறிவிக்க முடியும். விருதாச்சலம் தொகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்படும் நெல்கள் உரிய பாதுகாப்பின்றி மழையில் நனைந்து கொண்டிருக்கின்றன. இதனை துறை சார்ந்த அமைச்சரும், அரசும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் சுமார் இரு நாட்களில் நெல்களை கொள்முதல் செய்து விடுவர்.
நெல்கள் மழையில் நனைந்து வீணாகின்றன
ஆனால், தற்போது புதிய ஆட்சி அமைந்திருப்பதால் நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதனால், பல லட்சம் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். வேளாண் துறை அமைச்சர் வினோத்தின் சொந்த ஊரான கும்பகோணத்திலும் பல்வேறு இடங்களில் நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. தமிழகத்தில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இதனை சேமித்து வைக்கும் வகையில் குளம், ஏரிகள் உள்ளிட்டவற்றை தூர்வார வேண்டும்.
மேலும் படிக்க: காவிரி உரிமையில் எந்த சமரசமும் இல்லை; மேகதாது அணையை தடுக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும்” – அமைச்சர் என். ஆனந்த் உறுதி
தண்ணீருக்காக கையேந்தி நிற்க வேண்டாம்
தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதன் மூலம் மற்ற மாநிலங்களில் தண்ணீருக்காக கையேந்தி நிற்பது தவிர்க்கப்படும். தமிழக முதல்வர் விஜய் அனைத்து கட்சிகளையும் ஒன்றாக திரட்டி நீட் தேர்வு, காவிரி நீர் உள்ளிட்ட விவரங்களுக்காக பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாய பட்ஜெட்டில் அனைத்து தரப்பினரும் பெரிதாக எதிர்பார்த்த விவசாய கடன் முழு தள்ளுபடி என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. கர்நாடகாவில் இருந்து உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
முதல்வர் பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும் நிற்கும்
காவிரி நீர் நமது உரிமை. அதை தர வேண்டியது கர்நாடக அரசின் கடமை. இதனை யாரும் மாற்ற முடியாது. காவிரி நீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஒட்டுமொத்த தமிழகமும் பின்னால் நிற்கும். முதல்வர் கர்நாடகா செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு தேமுதிக துணை நிற்கும். முதல்வருக்கு தலைகுனிவு ஏற்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் வெகுண்டெழும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!