பட்டாசு உற்பத்தியில் ‘Zero Accident’ இலக்கு.. கோவையில் மாபெரும் கலந்தாய்வு!
தமிழ்நாட்டின் மிக முக்கியத் தொழில் துறையான பட்டாசு உற்பத்தியில் விபத்துகளை முற்றிலுமாகத் தடுத்து, தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் "பாதுகாப்பான பட்டாசு உற்பத்திக்கான தொழில்நுட்பம் – Zero Accident Vision நோக்கி" என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாபெரும் கலந்தாய்வு கோவையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் மிக முக்கியத் தொழில் துறையான பட்டாசு உற்பத்தியில் விபத்துகளை முற்றிலுமாகத் தடுத்து, தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் “பாதுகாப்பான பட்டாசு உற்பத்திக்கான தொழில்நுட்பம் – Zero Accident Vision நோக்கி” என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாபெரும் கலந்தாய்வு கோவையில் நடைபெற உள்ளது. இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் சுமார் 90% பங்களிப்பை வழங்கி வரும் தமிழ்நாட்டின் பட்டாசுத் தொழில், ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வர்த்தகத்தையும், 7 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.
இத்தகைய பிரம்மாண்ட தொழில்துறையில் தொழிலாளர் பாதுகாப்பு, தானியங்கி இயந்திரமயமாக்கல், தீ தடுப்பு மற்றும் அவசரகாலத் தயார்நிலை ஆகியவை இனி தனித்தனி பிரச்சனைகளாகப் பார்க்கப்படாமல், ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்முறை முன்னுரிமையாக அணுகப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு பட்டாசு மற்றும் அமோர்சஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய பாதுகாப்பு உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தத் தேசிய கலந்தாய்வு, வரும் செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கோவை ஈச்சனாரியில் உள்ள ‘ரத்தினம் கிராண்ட் ஹாலில்’ நடைபெறவுள்ள SIDA Defence Expo 2026-ன் முக்கிய அங்கமாக நடைபெறுகிறது.
