முதல் நாளே இப்படியா? கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் காலை உணவு தட்டுப்பாடு.. பக்கத்து கடையில் இட்லி வாங்கிய அவல நிலை!
Perunthalaivar Kamarajar Breakfast Scheme : கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளியில் காமராஜர் காலை உணவு திட்டத்தில் காலை உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், அருகில் உள்ள கடையில் இட்லி வாங்கி வந்து மாணவிகளுக்கு பரிமாறப்பட்டது. இது தற்போது பேசும் பொருளாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 அரசு பள்ளிகளில் காலை உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதால், பக்கத்தில் உள்ள கடையில் இட்லி வாங்கி மாணவிகளுக்கு பரிமாறப்பட்டது பேசும் பொருளாகி உள்ளது. தமிழகத்தில் காமராஜர் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது இன்று செவ்வாய்க்கிழமை 6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்வதற்கான நிகழ்ச்சியை முதல்வர் விஜய் தொடங்கி வைத்திருந்தார். அதன் அடிப்படையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் காலை உணவு வழங்கப்பட்டது. இதில், உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக அருகில் உள்ள கடையில் இட்லி வாங்கி பரிமாறியது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
காலை உணவு திட்டத்தில் உணவு தட்டுப்பாடு
கிருஷ்ணகிரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு, 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. அந்த மாணவர்களுக்கு இன்று காலை காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ், உணவு வழங்கப்பட்டது. அப்போது, மாணவர்களுக்கான உணவு திடீரென தீர்ந்து போனதால் மாணவிகள் தட்டை கையில் ஏந்தியவாறு காத்திருந்தனர். இதன் காரணமாக அருகில் உள்ள கடையிலிருந்து இட்லி வாங்கி வரப்பட்டு மாணவிகளுக்கு பரிமாறப்பட்டது.
மேலும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கொடுத்த பதிலடி.. முழு விவரம்!




மாணவிகளை கணக்கெடுக்காமல் உணவு தயாரிப்பா
இதனை, சாப்பிட்டுவிட்டு மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர். ஒரு பள்ளியில் நடுநிலை வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்து கணக்கெடுக்காமல் உணவு தயாரிக்கப்பட்டது என்று பரவலாக கேள்வி எழுந்து வருகிறது. இதே போல, திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளும் காலை உணவு தீர்ந்ததால், அருகிலுள்ள கடையிலிருந்து இட்லி வாங்கி வந்து மாணவிகளுக்கு பரிமாறப்பட்டுள்ளது.
திருமங்கலம் அரசுப் பள்ளியிலும் உணவு தட்டுப்பாடு
அப்போது, பள்ளி ஊழியர்கள் இதை சாப்பிட்டு விடுங்கள் வேறு உணவு வந்துவிடும் என்று கூறியபடியே காலை உணவை பரிமாறி உள்ளனர். திமுக ஆட்சியில் 6- ஆம் வகுப்பு வரை தொடங்கப்பட்ட முதல்வரின் காலை உணவு திட்டம், தவெக ஆட்சியில் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றப்பட்டு 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் இதுபோன்று உணவு தட்டுப்பாடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: மதுவை விற்க கள்ளுக்கு தடையா? தமிழக அரசை வெளுத்து வாங்கிய சீமான்.. ஆவேசத்தில் கொந்தளிப்பு!