AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காவிரி உரிமையில் எந்த சமரசமும் இல்லை; மேகதாது அணையை தடுக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும்” – அமைச்சர் என். ஆனந்த் உறுதி

ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) கூட்டத்தில், தமிழ்நாடு தனது உரிமையை வலியுறுத்தியது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம், மொத்தம் 4.536 டி.எம்.சி. நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. எனினும், அந்த உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை.

காவிரி உரிமையில் எந்த சமரசமும் இல்லை; மேகதாது அணையை தடுக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும்” – அமைச்சர் என். ஆனந்த் உறுதி
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Aug 2026 12:47 PM IST

ஆகஸ்ட் 7, 2026: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்த தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளருமான என். ஆனந்த், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு காவிரி உரிமையில் எந்த நிலையிலும் சமரசம் செய்யாது என்றும், சட்டரீதியாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

காவிரி டெல்டா, தமிழ்நாட்டின் உயிர்நாடியாகும்:

அப்போது பேசிய அவர், “காவிரி டெல்டா, தமிழ்நாட்டின் உயிர்நாடியாகும். டெல்டா மாவட்டங்களின் விவசாயமும், பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவையும் காவிரி நீரைச் சார்ந்தே உள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகள் மூலம் தமிழ்நாட்டின் உரிமை உறுதி செய்யப்பட்டிருந்தாலும், மாதந்தோறும் உரிய நீரை கர்நாடகாவிலிருந்து பெறுவது தொடர்ந்து சவாலாகவே இருந்து வருகிறது.

காவிரி நீர்ப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து, ஆகஸ்ட் 3ஆம் தேதி பெங்களூருவில் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கர்நாடக முதலமைச்சர் அந்த தேதி பொருத்தமற்றது என தெரிவித்ததால், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை கர்நாடகா அரசு செயல்படுத்தவில்லை:

ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) கூட்டத்தில், தமிழ்நாடு தனது உரிமையை வலியுறுத்தியது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம், மொத்தம் 4.536 டி.எம்.சி. நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. எனினும், அந்த உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை.

மேலும் படிக்க: “நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்குத் துரோகம்!”.. தவெக அரசின் தனித் தீர்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு.. பேரவையில் இபிஎஸ் உரை!!

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை 3,500 கனஅடி நீர் கிடைக்க வேண்டிய நிலையில், பில்லிகுண்டுலுவில் 144 முதல் 619 கனஅடி வரை மட்டுமே நீர் வந்தது. இதனால் தமிழ்நாட்டின் நீர் பற்றாக்குறை மேலும் அதிகரித்தது. இதையடுத்து, நிலுவை நீரையும் உடனடியாக திறந்துவிடவும், விகிதாசார அடிப்படையில் பற்றாக்குறையை ஈடுசெய்யவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆகஸ்ட் 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவிடம் தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஆய்வு மேற்கொண்டு அணை திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்:

மேட்டூர் அணையைப் பொறுத்தவரை, ஜூன் மாதத்தில் போதிய நீர்வரத்து இல்லாததால், வழக்கம்போல் ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக அணையை திறக்க முடியவில்லை. குடிநீர் தேவைக்கு முன்னுரிமை அளித்து அணை மிகுந்த கவனத்துடன் நிர்வகிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து அதிகரித்து வந்தாலும், தொடர்ச்சியான வரத்து, மேட்டூர் அணையின் இருப்பு, டெல்டா பாசனத் தேவைகள் மற்றும் குடிநீர் பாதுகாப்பு ஆகியவற்றை தினந்தோறும் ஆய்வு செய்து, அதற்கேற்ப அணை திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்.

ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை நிலவரப்படி, தமிழ்நாடு பெற்றுள்ள மொத்த காவிரி நீர் 4.947 டி.எம்.சி. மட்டுமே. இறுதித் தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய அளவை ஒப்பிடுகையில் 41.412 டி.எம்.சி. நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும்!”.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் பதிலடி!

மேகதாது அணை விவகாரத்தில், முதலமைச்சர் விஜய் ஏற்கனவே பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதி தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார். மேலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT), உச்சநீதிமன்றம் உள்ளிட்ட சட்ட அமைப்புகளில் தமிழக அரசு வழக்குகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. கர்நாடக அரசு இதுவரை திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்று மத்திய அரசும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது தமிழகத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ உரிமையை பாதுகாப்பதில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு எந்த நிலையிலும் சமரசம் செய்யாது. டெல்டா விவசாயிகள் நலன், குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தேவையான அனைத்து சட்ட, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்தார்.

Follow Us