AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்குத் துரோகம்!”.. தவெக அரசின் தனித் தீர்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு.. பேரவையில் இபிஎஸ் உரை!!

TN Assembly Tax Devolution Resolution: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மத்திய அரசின் நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் நிதி இழப்புகளைச் சுட்டிக்காட்டி தவெக அரசு முன்மொழிந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்கள் தொகை கணக்கெடுப்பு மாற்றங்களால் தமிழ்நாட்டின் நிதிப் பங்கு தொடர்ந்து குறைந்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

“நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்குத் துரோகம்!”.. தவெக அரசின் தனித் தீர்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு.. பேரவையில் இபிஎஸ் உரை!!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 07 Aug 2026 12:30 PM IST

சென்னை, ஆகஸ்ட் 07: தமிழ்நாடு சட்டமன்றத்தில் மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் மத்திய வரிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தொடர் நிதி இழப்புகளைச் சுட்டிக்காட்டித் தவெக அரசு சார்பில் நிதி மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சரால் தனித் தீர்மானம் ஒன்று சட்டப்பேரவையில் இன்று முன்மொழியப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தீர்மானத்திற்கு அதிமுகவின் முழு ஆதரவை வழங்கிப் பேரவையில் உரையாற்றினார்.

இதையும் படிக்க: தவெக அரசுக்கு திமுக வைத்த செக்.. முதல்வர் விஜய் அழைத்துள்ள எம்.பிக்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக நிபந்தனை!!

தமிழ்நாட்டிற்கு ஏற்படும் நிதி இழப்புகள்:

பேரவையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “மத்திய வரிப் பகிர்வு மற்றும் மத்திய திட்ட நிதி உதவி என இரு வழிகளில் மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. இதில் 12-வது நிதிக்குழுவிற்குப் பிறகு தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வு படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது. தனிநபர் வருமானம் ஒரு முக்கியக் காரணியாக எடுத்துக்கொள்ளப்படுவது, வனப்பகுதியின் அளவீடுகள் நமக்குச் சாதகமாக இல்லாதது மற்றும் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை மாற்றப்பட்டது ஆகியவைதான் தமிழ்நாட்டின் நிதிப் பங்கு குறைய முக்கியக் காரணங்கள்” என்று விளக்கினார்.

தொடர் அழுத்தமும் தீர்மானத்திற்கு ஆதரவும்:

தொடர்ந்து பேசிய அவர், “ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலும், அவரைத் தொடர்ந்து அமைந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் நிதிப் பகிர்வில் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய அரசிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். பின்தங்கிய மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதால், வளர்ந்த மாநிலமான தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து குறைகிறது. எனவே, மத்திய நிதிக்குழுவின் எல்லை வரம்புகளை மாற்றி அமைத்து, தமிழ்நாட்டின் நிதி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்” எனக் குறிப்பிட்டார்.

தீர்மானத்தை வரவேற்ற இபிஎஸ்:

மாநில நலன் சார்ந்த இந்த விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டுத் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், “தவெக அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சிறப்புத் தனித் தீர்மானத்தை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழு மனதுடன் ஆதரிக்கின்றோம்” என்று கூறினார்.

தீர்மானம் நிறைவேற்றம்:

தொடர்ந்து தீர்மானம் குறித்து விளக்கமளித்து உரையாற்றிய நிதி மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன், “இந்திய மக்கள் தொகையில் 6% மட்டுமே உள்ள தமிழ்நாடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9%-க்கும் அதிகமாகப் பங்களித்து வருகிறது. ஆனால், 16-வது நிதிக்குழுவில் தமிழ்நாட்டிற்கான பகிர்வு 4.097% என்ற மிகச் சிறிய அளவிலேயே உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கள் எந்த சிறப்புச் சலுகையும் கேட்கவில்லை; அரசியலமைப்புச் சட்டத்தின்படி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நியாயமான நிதிப் பங்கையே கேட்கிறோம்” எனத் தெளிவுபடுத்தினார்.

இதையும் படிக்க: “பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும்!”.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் பதிலடி!

இதனைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. “ஏற்போர் ‘ஆம்’ என்க, மறுப்போர் ‘இல்லை’ என்க” என்று சபாநாயகர் வினவிய போது, எதிர்ப்புக் குரல்கள் எதுவும் எழாததால், மத்திய நிதிப் பகிர்வுக்கு எதிரான தவெக அரசின் தனித் தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகச் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Follow Us