தவெக அரசுக்கு திமுக வைத்த செக்.. முதல்வர் விஜய் அழைத்துள்ள எம்.பிக்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக நிபந்தனை!!
TVK Govt All-Party MP Meeting: தமிழ்நாடு அரசு சார்பில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி கூட்டப்பட உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் பாதிக்காத வகையில் நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 07: முதல்வர் விஜய் அழைத்துள்ள எம்.பிக்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதில் எந்த தயக்கமும் இல்லை என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், முதலில் மேகதாது பிரச்சனையை விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மாநிலத்தின் மிக முக்கியமான பிரச்சினையான தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பதற்காக வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
இதையும் படிக்க: மாறிய பெயர்கள்… மாறாத திட்டங்கள்?.. வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிளம்பிய விமர்சனம்!!
இக்கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தவெக அரசின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை எனத் தெரிவித்துள்ள அதே வேளையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு மிக முக்கியமான அரசியல் நிபந்தனை ஒன்றையும் அவர் முன்வைத்துள்ளார்.
திமுகவின் உறுதியான நிலைப்பாடு:
துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் நலனையும் மாநிலத்திற்குரிய பிரதிநிதித்துவத்தையும் பாதிக்காத வகையில் தொகுதி மறுசீரமைப்பு அமைய வேண்டும் என்பதில் திமுக மிகத் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் திமுக இப்போதும் உறுதியாக இருக்கிறது. முறையற்ற தொகுதி மறுசீரமைப்பினால் இந்திய அளவில் ஏற்படக்கூடிய பேராபத்தை முதன்முதலில் சுட்டிக்காட்டி, பாதிப்புக்குள்ளாகும் அனைத்து மாநிலங்களையும் ஒரே அணியில் திரட்டி தேசிய அளவில் விவாதத்தை உருவாக்கியது திமுகதான் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது விவகாரமும் திமுகவின் நிபந்தனையும்:
ஆகஸ்ட் 8-ஆம் தேதி தவெக அரசு கூட்டியுள்ள எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்கும் எனக் கூறியுள்ள துரைமுருகன், அதற்கு முன்பாக அரசு நிறைவேற்ற வேண்டிய நிபந்தனை ஒன்றையும் முன்வைத்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தீவிர முனைப்பு காட்டி வரும் சூழலில், தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த எதிர்ப்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் உடனடியாகத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும்.
இதையும் படிக்க : திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட வெற்றி லேபிள் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
தவெக அரசு மீதான விமர்சனம்
முன்னதாக திமுக கூட்டணியில் இருந்து விலகி, தற்போது தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் உணர்வுகள் புண்பட்டுவிடும் என்பதற்காகவே, மேகதாது விவகாரத்தில் தவெக அரசு கள்ள மௌனம் காத்து வருவதாகவும் துரைமுருகன் தனது அறிக்கையில் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திற்காக மட்டும் கூட்டத்தைக் கூட்டுவதை விடுத்து, தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேகதாது விவகாரத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். திமுகவின் இந்த அதிரடி நிபந்தனையால் தவெக அரசுக்கு அரசியல் ரீதியான புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.