செப். 28ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் இரவு நேரங்களில் மழை இருக்கும் – வானிலை ரிப்போர்ட்..
Rainfall Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22, 2026: வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 24-ஆம் தேதி வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு இடையே விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையில் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தொடர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஜெம் கிராணைட் வீரமணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை… திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை இருக்கும்?
இதனுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சி காரணமாக, தென்கிழக்கு அரபிக்கடல் முதல் கர்நாடகா மற்றும் கடலோர ஆந்திரா வழியாக காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவி வருகிறது.
இதன் காரணமாக இன்று (செப்.22) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
செப். 28ஆம் தேதி வரை மிதமான மழை இருக்கும்:
நாளை (செப்.23) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: திமுக கூடாரமாகும் தவெக.. முதல்வர் விஜய்க்கு வீடியோ வெளியிட்டு தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி.. தூத்துக்குடியில் பகீர் சம்பவம்!
செப்.24-ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.25, 26-ஆம் தேதிகளில் வட தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், 27, 28-ஆம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் மாலை/ இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.