இரண்டாவது முதலமைச்சர்.. அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம்: அமைச்சர் நிர்மல் குமார் மீது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு
PTR Palanivel On Minister CTR Nirmal Kumar: மிக முக்கியமான கோயில்களான திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவை ராஜினாமா செய்யச் சொல்லி அவர் அழுத்தம் கொடுக்கிறார். இதன் காரணமாகவே என் தாயார் ருக்மணியை அறங்காவலர் குழுவில் இருந்து ராஜினாமா செய்ய இணை ஆணையர் அழுத்தம் கொடுக்கிறார் என குறிப்பிட்டிருக்கிறார்
செப்டம்பர் 23, 2026: தமிழகத்தில் தற்போதைய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, மதுரையில் இருக்கக்கூடிய மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமார் அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா:
சமீபத்தில் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா என்பது 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்றது. அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாக அறங்காவலர் குழுவைச் சேர்ந்த பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: வீரமணியின் வீடு, அலுவலகங்களில் போலீஸ் சோதனை – திடுக்கிடும் தகவல்கள்
அதேபோல, குடமுழுக்கு நடைபெற்ற அன்றைய நாளில் மக்களுக்கு புனித நீர் தெளிக்கப்படாதது, அதேபோல கோபுரத்திற்கு அருகே காத்திருந்த மக்கள் மீது சாதாரண தண்ணீரை காவல்துறையினர் ஊற்ற முயற்சி செய்தது, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேண்டியவர்களுக்கு மட்டுமே சிறப்பு தரிசனம் வழங்கப்பட்டது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான ஒரு சில வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரால் பகிரப்பட்டு வைரலானது.
மீண்டும் அரசியல் களத்தில் பி.டி.ஆர் பழனிவேல்?
இந்தச் சூழலில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பாக மதுரையில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அவர் அரசியலில் இருந்து சற்று காலம் ஒதுங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும், தமிழக வெற்றிக் கழக அரசு மீதான விமர்சனங்களையும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார் இந்தச் சூழலில், தனியார் செய்தித் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் நிர்மல் குமார் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
மேலும் படிக்க: சென்னையில் இரவில் அலரல் சத்தம்.. நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மாணவர் உள்பட மூவரின் வக்கிர செயல்!
இரண்டாவது முதலமைச்சராக செயல்படும் அமைச்சர் நிர்மல் குமார்:
அதாவது, மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரையில் தனி முதலமைச்சராக, அதாவது இரண்டாவது முதலமைச்சராக அமைச்சர் நிர்மல் குமார் செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் விஜய்யுடைய அனுமதியுடன் இது நிச்சயமாக நடக்காது.
மிக முக்கியமான கோயில்களான திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவை ராஜினாமா செய்யச் சொல்லி அவர் அழுத்தம் கொடுக்கிறார். இதன் காரணமாகவே என் தாயார் ருக்மணியை அறங்காவலர் குழுவில் இருந்து ராஜினாமா செய்ய இணை ஆணையர் அழுத்தம் கொடுக்கிறார் என குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கின்றன.