சென்னையில் இரவில் அலரல் சத்தம்.. நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மாணவர் உள்பட மூவரின் வக்கிர செயல்!
Chennai Harassing Woman 3 Arrested : சென்னையில் நடு ரோட்டில் இரவு தனியாக நடந்து சென்ற இளம் பெண்ணிடம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். அவர்களை அசோக் நகர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
சென்னை மாவட்டம், அசோக் நகர் பகுதியில் பிரபல அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இதற்காக, அந்த பெண் அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு தினமும் காலையில் பணிக்கு சென்றுவிட்டு இரவு சுமார் 11 மணி அளவில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென அவரது கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை அளித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் சத்தம் போட்டார்.
நடு ரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மூவர்
அவரது சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்த நிலையில், அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது, அவர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். தொடர்ந்து, இருந்த சம்பவம் தொடர்பாக அசோக் நகர் காவல் நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் அதிரடி கைது
இதில், அந்த நபர்கள் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான ராபின் நெல்சன் ( 22 வயது), மனோ கார்த்திக் ( 20 வயது) மற்றும் கிருஷ்ணகுமார் ( 25 வயது) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் தினமும் அந்த வழியாக தனியாக நடந்து செல்லும் அந்த பெண்ணை நோட்டமிட்டுள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று இரவும் அந்த பெண் தனியாக நடந்து சென்ற நிலையில், இதனை அறிந்த கல்லூரி மாணவர் உள்ளிட்ட 3 பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது.




மூவரும் புழல் சிறையில் அடைப்பு
இதைத் தொடர்ந்து, அவர்கள் மீது போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். சென்னையில் பரபரப்பாக இயங்கி வரும் அசோக் நகர் பகுதியில் தனியாக நடந்து சென்ற வெளி மாநிலத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யுடன் ஏன் லண்டன் செல்லவில்லை? அமைச்சர் கீர்த்தனா ஆதாரத்துடன் விளக்கம்.. என்ன அது!