சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்.. கூவம் ஆற்றில் பசுமை பகுதிகள்- நடைபாதை.. முதல்வரின் சூப்பர் திட்டம்!
CM Vijay Consultation Cooum River : சென்னை கூவம் ஆற்றில் பசுமை பகுதிகள், நடைபாதை, மிதிவண்டி பாதை உள்ளிட்டவை அமைப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் விரிவான ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
சென்னையில் பாயும் கூவும் ஆற்றை மறு சீரமைத்து நடைபாதை, மிதிவண்டிகள் செல்வதற்கான பாதை, நதிக்கரை நடைபாதைகள், பசுமை பகுதிகள் உள்ளிட்டவை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கூவம் ஆற்றை மறு சீரமைப்பு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், தமிழக அரசு 2026- 2027- ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் சென்னை நதிகள் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, கூவம் ஆறு மறு சீரமைப்பு திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கூவம் ஆற்றை முன்பு இருந்தது போல அதன் இயற்கையான நிலைக்கு மீட்டெடுக்கப்பட உள்ளது.
நிலையான சுற்றுச்சூழல் சீரமைப்பை உறுதி செய்ய
அத்துடன், நிலையான சுற்றுச்சூழல் சீரமைப்பை உறுதி செய்யவும், கூவம் ஆறு சீரமைப்புக்கான நிலையான சுற்றுச்சூழல் சீரமைப்பை உறுதி செய்யவும், விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் இந்த திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், பன்னாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தரநிலைகளை உறுதி செய்யும் வகையில் இதற்கான உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் கோருவதற்கான பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கொடுத்த பதிலடி.. முழு விவரம்!




கூவம் ஆற்றில் நடைபாதை, பசுமை பகுதிகள், நதிக்கரை பாதை
இந்த திட்டத்தின் தொடக்க நடவடிக்கையாக, கூவம் ஆற்றின் மறு சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான கருத்து உருவாக்கம், செயல் விளக்கத் திட்டம் மேற்கொள்வதற்காக, முதல் கட்டமாக கூவம் ஆற்றில் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கான நடைபாதை, மிதிவண்டிகள் சென்று வருவதற்கான பாதை, நதிக்கரை நடைபாதை, கூவம் ஆற்றை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான தளங்கள்.
பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாக மாறும் கூவம் ஆறு
இதே போல, பசுமை பகுதிகள், சமூக பயன்பாட்டு வசதிகள் மற்றும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் ஆற்றின் சூழலை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த பொதுவெளிகளையும், வசதிகளையும் உருவாக்கும் வகையில், பல்வேறு கட்டங்களாக கூவம் ஆறு மறு சீரமைப்பு ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறையுடன் முன்னெடுத்து செல்ல உள்ளது. இதன் மூலம், மாசடைந்து உள்ள கூவம் ஆறு மறு சீரமைப்பு செய்யப்பட்டு பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாக மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மதுவை விற்க கள்ளுக்கு தடையா? தமிழக அரசை வெளுத்து வாங்கிய சீமான்.. ஆவேசத்தில் கொந்தளிப்பு!