தவெக நிர்வாகி திடீர் தற்கொலை.. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மீது பகீர் புகார்.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலால் பதற்றம்!
Ramanathapuram TVK Functionary Self Harm : ராமநாதபுரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தற்கொலை செய்த சம்பவத்தில் அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் காந்தி நகரை சேர்ந்தவர் பரந்தாமன் ( 38 வயது). இவர், தமிழக வெற்றி கழகத்தில் வார்டு செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், இவரது பொறுப்பை மாவட்ட செயலாளர் ஜெயபாலா பறித்ததாக கூறப்படுகிறது. இதில், அதிருப்தி அடைந்த பரந்தாமன் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி ஜோதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது கணவர் பரந்தாமனின் தற்கொலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் மலர்வழி ஜெயபாலா தான் காரணம் என்று அதில் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தவெக மாவட்ட செயலாளர் ஜெயா பாலா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பரந்தாமன் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் ராமேஸ்வரம் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தவெக மாவட்ட செயலர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது, பரந்தாமன் தற்கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துடன், கோஷங்களை எழுப்பினர். அத்துடன், போலீசார் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
மேலும் படிக்க: சென்னையில் இரவில் அலரல் சத்தம்.. நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மாணவர் உள்பட மூவரின் வக்கிர செயல்!




ராமேஸ்வரத்தில் ஏராளமான போலீசார் குவிப்பு
இதன் காரணமாக ராமேஸ்வரம்- தனுஷ்கோடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி உள்ளது. போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனை தடுக்கும் விதமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பரந்தாமனின் உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தவெக நிர்வாகி பரந்தாமனின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மதன் ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த தவெக நிர்வாகி ஒருவர் முதல்வர் விஜய்க்கு வீடியோ வெளியிட்டு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கடலூரை உலுக்கிய கொடூரம்.. 3 வயது குழந்தை மயங்கிய நிலையில் மீட்பு.. பின்னணியில் சிக்கிய ஐடிஐ மாணவன்!