கடலூரை உலுக்கிய கொடூரம்.. 3 வயது குழந்தை மயங்கிய நிலையில் மீட்பு.. பின்னணியில் சிக்கிய ஐடிஐ மாணவன்!
Cuddalore Harassing Case ITI Student Arrest : கடலூரில் 3 வயது பெண் குழந்தையை ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஐ. டி. ஐ. மாணவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், துறைமுகம் காவல் நிலைய பகுதிக்குள்பட்ட இடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிக்கு சென்ற 3 வயது பெண் குழந்தை அவரது வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதை அறிந்த பெற்றோர் குழந்தையை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்த நிலையில் அந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை, குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அவர்கள் இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்தனர். இதனிடையே, 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை விரைந்து கைது செய்ய கோரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பு கேமராவில் சிக்கிய உருவம்
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அவர்களை கலைந்து போக செய்தனர். தொடர்ந்து, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்தனர். இதில், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் குழந்தையை ஒருவர் தூக்கி சென்றது பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சென்னையில் இரவில் அலரல் சத்தம்.. நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மாணவர் உள்பட மூவரின் வக்கிர செயல்!




3 வயது குழந்தைக்கு தொல்லை அளித்த 17 வயது சிறுவன்
அந்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் குழந்தையின் வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுவன் என்பதும் இவர், ஐடிஐ- இல் படித்து வருவதும் போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் அடிப்படையில், போலீசார் அந்த மாணவரை அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், 3 வயது பெண் குழந்தையை பழக்கத்தின் அடிப்படையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை ஒத்துக் கொண்டார்.
கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட சிறுவன்
இதை தொடர்ந்து, அந்த மாணவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். வீட்டின் அருகே வசித்து வரும் 3 வயது பெண் குழந்தையை 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தாராபுரத்தில் விஜய்யின் மாஸ்.. பாஸ் ஆகாது.. தொகுதி மக்கள் கொத்து பரோட்டா போடுவது உறுதி.. ஆர்.பி. உதயகுமார் அட்டாக்!