“செப்டிக் டேங்கில் விழுந்த காட்டெருமை”.. வால்பாறையில் 4 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறை!
Valparai Gaur Rescue: கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட்டில் கழிவுநீர்த் தொட்டிக்குள் (செப்டிக் டேங்க்) விழுந்த 5 வயது காட்டெருமையை வனத்துறையினரும் எஸ்டேட் தொழிலாளர்களும் இணைந்து 4 மணி நேரம் போராடிப் பத்திரமாக மீட்டனர். எவ்விதக் காயமுமின்றி மீட்கப்பட்ட காட்டெருமை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.
கோவை, செப்.23: கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. வனவிலங்குகளின் இயற்கையான வாழ்விடங்களை ஒட்டியே மனிதக் குடியிருப்புகளும் தொழிலாளர்களின் லயன் படிகளும் அமைந்துள்ளதால், இங்கு யானைகள், சிறுத்தைகள் மற்றும் காட்டெருமைகளின் நடமாட்டம் இயல்பாகவே அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீரைத் தேடித் தோட்டப் பகுதிகளுக்குள் நுழையும் காட்டெருமைகள், சில நேரங்களில் மனிதர்கள் அமைத்துள்ள ஆழமான குழிகள் மற்றும் பயன்பாட்டில் உள்ள தொட்டிகளில் விழுந்து விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், அக்காமலை எஸ்டேட் பகுதியில் நள்ளிரவில் கழிவுநீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமை ஒன்றை வனத்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டுள்ளனர்.
நள்ளிரவில் நடந்த எதிர்பாராத விபத்து:
வால்பாறை அருகே அமைந்துள்ள அக்காமலை எஸ்டேட் 2-வது டிவிஷன் ‘ஐந்துலயன் பாடி’ பகுதியில், எஸ்டேட் தொழிலாளியான ஜோதி என்பவரின் வீட்டருகே நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் சுமார் 5 வயது மதிக்கத்தக்கப் பெண் காட்டெருமை ஒன்று உலா வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர்த் தொட்டியின் (செப்டிக் டேங்க்) மீது அந்த காட்டெருமை ஏறியுள்ளது. எதிர்பாராதவிதமாகத் தொட்டியின் மேல்மூடி உடைந்ததில், காட்டெருமை தொட்டிக்குள் தவறி விழுந்து மேலே வர முடியாமல் தத்தளித்தது. காட்டெருமையின் அலறல் சத்தத்தைக் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக வால்பாறை வனச்சரக அலுவலருக்கும் எஸ்டேட் நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
