AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தமிழ்நாடு எல்லையில் இருந்து 4 கி.மீ-ல் அணை!”.. மேகதாதுவுக்கு எதிராக சட்டமன்றத்தில் சீறிய சௌமியா அன்புமணி!

Sowmiya Anbumani Speech: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணை எதிர்ப்புத் தீர்மானத்தின் மீது பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி மிகக் காரசாரமாகவும் புள்ளிவிவரங்களுடனும் உரை நிகழ்த்தினார். காவிரி நதிநீரில் வரலாற்று ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் தமிழ்நாட்டிற்கு உரிய 175.25 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு ஒருபோதும் திறந்துவிட்டதில்லை என்று அவர் சாடினார்.

“தமிழ்நாடு எல்லையில் இருந்து 4 கி.மீ-ல் அணை!”.. மேகதாதுவுக்கு எதிராக சட்டமன்றத்தில் சீறிய சௌமியா அன்புமணி!
செளமியா அன்புமணி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 07 Aug 2026 11:44 AM IST

சென்னை, ஆகஸ்ட் 07: தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்தும், திட்டத்திற்கு எதிராக அனைத்துக் கட்சிகளின் குரலை வெளிப்படுத்தும் வகையிலும் அரசினர் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி பங்கேற்றுத் தங்களது கட்சியின் உறுதியான நிலைப்பாட்டைப் புள்ளிவிவரங்களுடன் பேரவையில் முன்வைத்தார். காவிரி நதிநீர் உரிமையில் கர்நாடகா செய்து வரும் துரோகங்கள் மற்றும் மேகதாது அணை அமைந்தால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பேரழிவுகள் குறித்து அவர் ஆற்றிய உரை பேரவையில் பெரும் கவனத்தைப் பெற்றது.

இதையும் படிக்க: “பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும்!”.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் பதிலடி!

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் ஏமாற்று வேலை:

சௌமியா அன்புமணி தனது உரையில், காவிரி நதிநீர்ப் பகிர்வின் வரலாற்றையும் தற்போதைய நிலையையும் சுட்டிக்காட்டினார். ஆண்டிற்கு 750 டி.எம்.சி நீர் வரும் காவிரியில், தமிழ்நாட்டிற்குத் தீர்ப்பாயத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 175.25 டி.எம்.சி நீரை மாதவாரி அட்டவணைப்படி கர்நாடக அரசு எப்போதும் திறந்துவிட்டதே இல்லை எனச் சாடினார். குறிப்பாக, 2026-ஆம் ஆண்டின் ஜூன் மாதம் 9.18 டி.எம்.சி திறக்கப்பட வேண்டிய இடத்தில் வெறும் 2 டி.எம்.சி-யும், ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி திறக்கப்பட வேண்டிய இடத்தில் 1 டி.எம்.சி-க்கும் குறைவான நீருமே திறக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆடிப்பெருக்கு சமயத்தில் மேட்டூருக்கு வந்த நீர், கர்நாடகா தார்மீக அடிப்படையில் திறந்த நீர் அல்ல என்றும், வயநாட்டில் பெய்த கனமழையால் கபினி அணை நிரம்பி வழிந்ததால் வந்த உபரி வெள்ள நீர் மட்டுமே என்றும் தெளிவுபடுத்தினார்.

நாடாளுமன்றக் கேள்விகளும் மேகதாதுவின் ஆபத்துகளும்:

ராஜ்யசபாவில் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விகளைச் சுட்டிக்காட்டிய அவர், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகமோ, நாடாளுமன்றமோ எவ்வித சட்டப்பூர்வ அனுமதியும் வழங்கவில்லை என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், “கிருஷ்ணகிரி – தர்மபுரி மாவட்டங்களின் தமிழ்நாடு எல்லையிலிருந்து வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது அண கட்ட கர்நாடகா முயல்கிறது. தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட வரக்கூடாது என்ற எண்ணத்திலேயே 70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த அணையைக் கட்டப் பார்க்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.

சுற்றுச்சூழல் பேரழிவும் பாமகவின் கோரிக்கையும்:

மேகதாது அணை அமைக்கப்பட்டால் உருவாகும் கடுமையான சுற்றுச்சூழல் கேடுகள் குறித்துப் பேசிய சௌமியா அன்புமணி, 12,500 ஏக்கர் வனப்பகுதிகள் நீரில மூழ்கும் என்றும், பிலிகிரி ரங்கநாதசுவாமி கோயில் புலிகள் காப்பகம், காவிரி வனவிலங்கு சரணாலயம், மாதேஸ்வரன் மலை சரணாலயம் ஆகியவை அழியும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தார். 700 ஆண்டுகள் பழமையான மூலிகை மரங்கள், நாற்கொம்பு மான்கள், சாம்பல் நீர்நாய்கள் மற்றும் மகாதீர் வகை அரிதான மீன்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் என்பதால், சுற்றுச்சூழல் சட்ட முன்னெடுப்புகளையும் அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க: தவெக அரசுக்கு திமுக வைத்த செக்.. முதல்வர் விஜய் அழைத்துள்ள எம்.பிக்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக நிபந்தனை!!

“மேகதாது அணை கட்டக் கூடாது என்பதில் நடுநிலையான முயற்சிகளுக்கோ பேச்சுவார்த்தைகளுக்கோ இடமில்லை; அணை கட்டவே கூடாது என்பதே இறுதியானது” என்று திட்டவட்டமாகப் பேசிய அவர், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒருங்கிணைந்த குழுவாக டெல்லி சென்று மத்திய அரசிடம் அழுத்தம் தர வேண்டும் எனப் பாமக சார்பில் வலியுறுத்தினார்.

Follow Us