பழனி கோவில் நில மோசடி வழக்கு.. சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் திடீர் உயிரிழப்பு.. மதுரையில் பரபரப்பு!
Palani Temple Land Scam: பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு மதுரை மத்திய சிறையில் திடீரெனக் கடுமையான நெஞ்சுவலி மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டும் பலனின்றி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல், ஆகஸ்ட் 08: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலியாகப் பத்திரப் பதிவு செய்து மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்தச் சலசலப்பை ஏற்படுத்திய வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டு, வழக்குடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
ரூ.100 கோடி நில மோசடி வழக்கு பின்னணி:
பழனி தண்டபாணி மடத்தின் நில மோசடி விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் மொத்தம் 11 பேர் மீது வழக்குத் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல நாட்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், நிலத்தை மோசடியாக விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூரைச் சேர்ந்த வெள்ளத்துறை மற்றும் பழனி புதூர் சேதுபதி, நிலப் பத்திரங்களைத் தயாரித்துக் கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் அண்மையில் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீனைத் திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவின்படி, சிபிசிஐடி போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து, மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு நேற்று மாலை 5 மணி அளவில் அவர் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
நள்ளிரவில் நெஞ்சுவலி – ஆம்புலன்ஸிலேயே உயிர் பிரிந்தது
சிறையில் அடைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அதாவது நள்ளிரவில் வழக்கறிஞர் அன்வர்தீனுக்குத் திடீரெனக் கடுமையான பதற்றமும் நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. உடனடியாகச் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதற்கட்ட அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காததால், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாகக் காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!
மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு
முக்கிய வழக்கில் கைதான நபர் சிறைக்காவலில் இருக்கும்போது உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளையும் சர்ச்சையையும் எழுப்பியுள்ளது. வழக்கறிஞர் அன்வர்தீனின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சிறைக் காவலில் நடைபெற்ற மரணம் என்பதால், சட்டவிதிகளின்படி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.