மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: மதுரைக்கு விடுமுறை அறிவிப்பு
Meenakshi Amman Temple Kumbabhishekam : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என்பதால், மதுரை மாவட்டத்துக்கு வருகிற செப்டம்பர் 17, 2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரை, செப்டம்பர் 12 : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என்பதால், மதுரை மாவட்டத்துக்கு வருகிற செப்டம்பர் 17, 2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில் மதுரை மட்டுமல்லாது தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தரவுள்ளனர்.
மதுரைக்கு விடுமுறை அறிவிப்பு
இந்நிலையில் இது தொடர்பாக வெளியான அறிக்கையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, விழா நடைபெறும் நாளான செப்டம்பர் 17, 2026 வியாழக்கிழமை அன்று மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதில், ‘மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இவ்விடுமுறை பொருந்தும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, வருகிற செப்டம்பர் 26, 2026 சனிக்கிழமை அன்று மதுரை மாவட்டத்தில் முழு பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் 46 டிஎஸ்பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்.. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!




மேலும், இந்த விடுமுறை செலாவணி முறிச் சட்டம், 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசரப் பணிகளைக் கவனிக்கும் வகையில் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கும். குடமுழுக்கு விழாவினைக் காண இலட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காகவும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும் இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவைக் காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சுமார் 6 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : அரசியல் களத்தில் அடுத்த புயல்! மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல் நடத்த தடை? உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு!
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், குடமுழுக்கு விழாவுக்கான தேவையான ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக கும்பாபிஷேகம் நடைபெறும் செப்டம்பர் 17ஆம் தேதி பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தங்கள் கட்டிடங்களின் மேற்கூரைகளில் எவரும் ஏறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி தரப்பில் நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.