தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் குறி வைத்த மாதம் எது.. முழு விவரம் உள்ளே!
5 Constituencies By Election : தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் ஆகஸ்ட் மாதம் இடைத் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான தேதி அடுத்த மாதம் ஜூலை மாதம் இறுதியில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில், பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்திருந்தார். தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அதிமுகவை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்திருந்தனர். இதில், மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி சத்யபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் அடுத்தடுத்து தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதனால், திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் காலியானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
5 தொகுதிகள் இடைத்தேர்தல் தேதி
ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அந்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, தற்போது 5 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், இந்த தொகுதிகளில் ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான, இடைத் தேர்தல் தேதி ஜூலை மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அந்த 5 தொகுதிகளில் இடைத்தேர்தலில் நடத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம்.. மீண்டும் விசாரணையை தொடங்கிய சிபிஐ!




வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாராக வைக்க வேண்டும்
மேலும், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடிய துணை ராணுவத்தினரின் பட்டியலையும் உள்துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இந்த நிலையில், வருகிற ஜூன் 22- ஆம் தேதிக்குள் ( திங்கள்கிழமை) அறிக்கையை தயார் செய்து அளிக்க வேண்டும் என்று 5 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள்
அதிமுகவை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் உள் கட்சி மோதல் காரணமாக தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேற்கண்ட 4 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்து அடுத்தடுத்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால், இடைத்தேர்தல் நடத்தக்கூடிய தொகுதி எண்ணிக்கை 5- ஆக உயர்ந்து தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: “ரீல்ஸ் எடுத்து போஸ்ட் போடவா சிங்கப்பெண் பிரிவு?”.. முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!